

அரசின் நிதி சுமை எங்களுக்கு தெரியாததை போலவும், கார் வழங்குவது ஆடம்பரம் என்பதை போல் பேசுகிறார் உதயநிதி என்றார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று சட்டம், எரிசக்தி துறை, அறநிலையத்துறை மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் திமுகவின் 59 எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா,
* ஏழை எம்எல்ஏக்களும் இருக்கிறார்கள்.
* என்னிடம் 4 கார் இருந்தாலும் அரசு காரில் சென்றால்தான் அதிகாரிகள் முன் மரியாதை இருக்கும் என மன்னார்குடி எம்எல்ஏ கூறினார்.
* எதிர்க்கட்சி தலைவருக்கு ஏற்கெனவே 3 வீடுகள் இருந்தாலும் ஏன் அரசு பங்களாவில் உள்ளார்.
* எம்எல்ஏக்களுக்கு கார்கள் என்பது ஆடம்பரமல்ல. ஊழல் இல்லா எம்எல்ஏவுக்கு மக்களை சந்திக்க கார் தேவை தான்.
* முதல்வர் அறிவிப்பு வெளியிடும்போது குறிப்பிட்ட கட்சியினருக்கு மட்டும் தர முடியாது, பொது அறிவிப்பாக தான் இருக்கும் என்று கூறினார்.
இதையடுத்து பேசிய திமுக எம்எல்ஏ கே.என்.நேரு, கார் வேண்டாம் என்று தானே சொன்னோம், வேண்டும் என்றா சொல்கிறோம். அமைச்சர் சொந்த வீட்டில் இருந்தாலும் கூட அரசாங்கம் வாடகை தருகிறது. அதை வேண்டாம் என எழுதி தாருங்கள் என்று கூறினார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா: அரசின் நிதி சுமை எங்களுக்கு தெரியாததை போலவும், கார் வழங்குவது ஆடம்பரம் என்பதை போல் பேசுகிறார் உதயநிதி என்றார்.
கே.என்.நேரு: நிதி நெருக்கடியில் கார்கள் வேண்டாம் என்பது தவறா? எங்களுக்கு கார்கள் வேண்டாம் என்றால் குதர்க்கமாக பேசுவதா?
அமைச்சர் ஷாஜகான்: கலைஞர் ஆட்சியில் 300-க்கும் அதிகமான யூனியன் சேர்மன்களுக்கு கார் வழங்கப்பட்டது. இதுவொன்றும் புதிதல்ல. கலைஞர் கார் வழங்கியபோது கேள்வி கேட்காமல் இப்போது கேள்வி கேட்பது சரியாக இருக்காது.
எ.வ.வேலு: அமைச்சருக்கு இணையான வசதியை எதிர்க்கட்சித் தலைவருக்கு பங்களா தருவது புரோடாகால், அதை ஏன் குறை கூறுகிறீர்கள். திமுகவினருக்கு தான் வேண்டாம் என சொன்னோம். மற்றவரை வாங்காதீர் என சொல்லவே இல்லையே என்று கூறினார்.
கம்யூனிஸ்டுகளுக்கும் கார்கள் வேண்டாம் என்று தளி ராமச்சந்திரன் கூறினார்.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது அவசியம் தான் என்று பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் கூறினார்.