

கார்த்திகை தீபத்திருநாளை ஒட்டி உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றாமல், வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோயிலில் இன்று தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறியது பெரும் வரலாற்று பிழை என வீ தி லீடர்ஸ் அமைப்பின் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;
“ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன.
நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் விஜய்யை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் விஜய்க்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.