திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் 7 புதிய சிக்னல்கள் இயக்கம்: போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல் துறை நடவடிக்கை!

இதன் மூலம் இப்பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வாகன விபத்து மற்றும் நெரிசலுக்குத் தற்காலிகத் தீர்வு காணப்பட்டுள்ளது.
Trichy national highways
Published on: 
Summary

திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் 7 புதிய சிக்னல்கள் இயக்கம் தொடங்கியது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தக் காவல் துறை அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

திருச்சி மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கியத் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்தைச் சீரமைக்கவும், சாலை விபத்துகளைத் தடுத்து நிறுத்திப் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் திருச்சி மாநகரக் காவல் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணைந்து சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை, புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை மற்றும் மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆகிய பிரதான வழித்தடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 7 தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் அதிகாரப்பூர்வமாக இயக்கத்திற்கு வந்துள்ளன.

5 புதிய சிக்னல்கள் அமைப்பு

திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான சேவை சாலைப் பகுதி, மாநிலத்திலேயே மிக அதிக போக்குவரத்து நெரிசலும், விபத்து அபாயமும் கொண்ட பகுதியாகக் கருதப்படுகிறது. இப்பகுதியில் வேகக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பான வாகன இயக்கத்திற்காக முக்கிய சந்திப்புகளைக் கண்டறிந்து மொத்தம் 5 புதிய சிக்னல்கள் அமைக்கப்பட்டுச் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வாகன விபத்து மற்றும் நெரிசலுக்குத் தற்காலிகத் தீர்வு காணப்பட்டுள்ளது.

மாநகரின் பிற முக்கிய நெடுஞ்சாலை சந்திப்புகளான புதுக்கோட்டை மற்றும் மதுரை தேசிய நெடுஞ்சாலை இணைப்புகளில் தலா ஒரு புதிய சிக்னல் வீதம் 2 பிரதான சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை நெடுஞ்சாலை-மாத்தூர் வளையச் சாலை சந்திப்பு

திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையும், மாத்தூர் வளையச் சாலையும் சந்திக்கும் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வந்தது.

இங்கு அமைக்கப்பட்டுள்ள புதிய சிக்னல் மூலம் புதுக்கோட்டை, காரைக்குடி மார்க்கமாகச் செல்லும் வாகனங்களும், வளையச் சாலையைப் பயன்படுத்தும் சரக்கு வாகனங்களும் தடையின்றிச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மதுரை நெடுஞ்சாலை - பஞ்சப்பூர் வளையச் சாலை சந்திப்பு

மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் வளையச் சாலை இணையும் இடம்மிக முக்கியமான போக்குவரத்து மையமாகும். இங்குப் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வரும் சூழலில், இச் சந்திப்பில் சிக்னல் இயக்கப்படுவது வாகனங்களை முறைப்படுத்தவும், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளின் போக்குவரத்தைச் சீரமைக்கவும் உதவும்.

பாதசாரிகள் பாதுகாப்பு

தொழிற்கூடங்களில் பணிபுரியும் ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தினமும் அச்சமின்றிப் பாதுகாப்பாக சாலையைக் கடக்க இந்த நவீன சிக்னல்கள் பெரிதும் துணைபுரிவதாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், சிக்னல்கள் அமைக்கப்பட்ட இடங்களுக்கு முன்னதாகவே ஓட்டுநர்கள் வாகனங்களின் வேகத்தைக் குறைக்கும் வகையில் "சிக்னல் பகுதி" என்ற எச்சரிக்கை பலகைகளும், சாலை விதிகளை விளக்கும் தரைக்கோடுகளும் தகுந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com