

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு வெள்ளி நகைத் தயாரிப்புப் பட்டறையில், நேற்று அதிகாலை புகுந்த மர்மக் கும்பல் ஒன்று, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளியைக் கொடூரமாகத் தாக்கிவிட்டு, சுமார் ரூ. 4 கோடி மதிப்புள்ள 550 கிலோ வெள்ளி கொலுசுகள் மற்றும் இதர வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சேலம் சின்னேரி வயக்காடு பகுதியைச் சேர்ந்த எம். பாலசுப்பிரமணியம் என்பவருக்குச் சொந்தமான இந்த வெள்ளிப் பட்டறையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக 24 மணி நேரமும் உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்தது.
பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த வெள்ளிப் பொருட்களே கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கொள்ளையர்கள் பட்டறைக்குள் நுழைவதற்கு முன்பாக, அங்கு பொருத்தப்பட்டிருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களையும் அடித்து உடைத்துத் தங்களின் அடையாளங்களை மறைத்துள்ளனர்.
பட்டறையின் வெளியே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளியை நான்கு பேர் கொண்ட கும்பல் பயங்கரமாகத் தாக்கி, அவரது கைகளைக் கட்டிப் போட்டுவிட்டு உள்ளே நுழைந்துள்ளது.
காயம் அடைந்த காவலாளி தற்போது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து உரிமையாளர் பாலசுப்பிரமணியம் அளித்த புகாரின் பேரில், பள்ளப்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சேலம் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி. பாபு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பட்டறையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர், "நான்கு பேர் கொண்ட கும்பல் காவலாளியைக் கட்டிப்போட்டுவிட்டு இந்தத் துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. கொள்ளையர்களை விரைந்து பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தீவிரமாகத் தேடப்பட்டு வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
தீபாவளிப் பண்டிகை நெருங்கும் வேளையில் கோடிக்கணக்கான மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.