கள்ளக்குறிச்சி அருகே கோழிப்பண்ணையில் பயங்கர தீ விபத்து: 4,500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலி

நேற்று காலை வழக்கம் போல ஏழுமலை தனது கோழிப்பண்ணைக்கு வந்து விட்டு மாலையில் வீட்டிற்கு சென்று விட்டார்.
கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் கோழிக்குஞ்சுகள் இறந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
Published on: 
Summary

கள்ளக்குறிச்சி அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4,500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்தன. மின் கசிவே தீ விபத்துக்கான காரணமாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கண்டாச்சிமங்கலத்தை சேர்ந்தவர் ஏழுமலை(வயது37).

கோழிப்பண்ணை

இவர் நாகலூர் அடுத்த மின்சார வாரிய அலுவலகம் அருகே கடந்த 8 ஆண்டுகளாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இங்கு ஏராளமான கோழிகள், கோழிக்குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஏழுமலை தினமும் தனது கோழிப்பண்ணைக்கு வந்து கோழிகளுக்கும், கோழிக்குஞ்சுகளுக்கும் உணவு அளித்து விட்டு செல்வது வழக்கம்.

நேற்று காலை வழக்கம் போல ஏழுமலை தனது கோழிப்பண்ணைக்கு வந்து விட்டு மாலையில் வீட்டிற்கு சென்று விட்டார்.

கோழிக்குஞ்சுகள் பலி

இந்த நிலையில் நள்ளிரவில் இவரது கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ கோழிப்பண்ணையில் உள்ள தென்னங்கீற்றுகள் உள்ளிட்டவற்றில் பற்றி, பண்ணை முழுவதுமாக எரிந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஏழுமலைக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கோழிப்பண்ணையில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் பண்ணையில் இருந்த 2 நாட்களே ஆன 4,500 கோழிக்குஞ்சுகளும் தீயில் கருகி உயிரிழந்தன. இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

X