

சென்னையில் 5 மண்டலங்களில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் குறைக்கப்படும். வீராணம் ஏரியில் இருந்து வரும் பிரதான குழாய் மாற்றியமைக்கும் பணிகள் காரணமாக, பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வருவாய் கிராமம் சாலை விரிவாக்க பணிகளுக்காக வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குடிநீர் குழாய் மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் வடக்குத்து நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே வருகிற 11-ந்தேதி காலை 6 மணி முதல் 15-ந்தேதி காலை 6 மணி வரை 4 நாட்கள் சென்னை மாநகரப் பகுதியில் குடிநீர் வினியோகம் குறைக்கப்படுகிறது.
நந்தனம், மயிலாப்பூர், மற்றும் கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு ஆகிய 5 மண்டலம் முழுவதும் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் குறைந்த அளவில் விநியோகிக்கப்படும்.
எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.