

காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டதுடன், கடைமடை பகுதிகளுக்கு போதிய தண்ணீர் வந்து சேரவில்லை.
இதனால் மழையை நம்பி நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டனர். முதற்கட்டமாக விதைக்கப்பட்ட விதைகள் முளைத்து வளர்ந்த நிலையில், தொடர்ந்து பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கபட்டன. இதையடுத்து மீண்டும் நிலத்தை உழுது 2-வது முறையாக விதைப்பு செய்தனர். தற்போது அந்த பயிர்கள் சுமார் 15 நாட்கள் வயது உடையதாக உள்ள நிலையில், போதிய மழை பெய்யாததால் வயல்வெளிகள் வறண்டு வெடித்து உள்ளன. பயிர்களும் வெயிலின் தாக்கத்தால் கருகி வருகின்றன.
அதன்படி, கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில் நிகழாண்டில் சுமார் 1.60 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதில் பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு முறையையே பின்பற்றி உள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து போதிய தண்ணீர் வரத்து இல்லாததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 20 முதல் 40 நாட்களே ஆன சம்பா நெற்பயிர்கள் தண்ணீரின்றி பாதிக்கப்பட்டன. கதிர் வெளிவருவதற்கு முன்பே பயிர்களுக்கு 2 முதல் 3 முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலையில், வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாததால் டீசல் மோட்டார்கள் மூலமாக கூட தண்ணீர் இறைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
அதிலும் குறிப்பாக, கீழையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலக்குறிச்சி, இறையான்குடி, களத்திடல்கரை, மடப்புரம், வாழக்கரை, ஏர்வைக்காடு, எட்டுக்குடி, திருக்குவளை, திருவாய்மூர், ஈசனூர், வெண்மணச்சேரி, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதில் பாலக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் 2 ஆயிரத்து 500 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் தண்ணீரின்றி வறண்டு, வயல்வெளிகள் வெடித்து காணப்படுதாக கண்ணீர் வடிக்கின்றனர்.