

தமிழ்நாட்டின் தேனி, கோவை மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. கடலோர கா்நாடக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தேனி மற்றும் கோவை மாவட்டங்களில் புதன்கிழமை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை (வியாழன் கிழமை) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், இதர தென் தமிழகம் மற்றும் வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பையொட்டி இருக்கக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (நவ. 5) முதல் சனிக்கிழமை (நவ. 7) வரை, அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட குறைவாக காணப்படும்.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.