சிக்கிய 170 ஆவணங்கள்.. அடுத்த கட்டத்திற்கு செல்லும் விசாரணை - சூடு பிடிக்கும் கே.என்.நேரு வழக்கு

திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் கே.என். நேரு.
கே.என். நேரு
Published on: 
Summary

கே என் நேரு வழக்கில் அவர் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 170 ஆவணங்கள் சிக்கியுள்ளன. எனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்த கே.என். நேரு மற்றும் அவர் தொடர்புடைய 25 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

நேரு அமைச்சராக இருந்தபோது அவர் சார்ந்த துறையில் பணி நியமனத்துக்கு மிகப்பெரிய அளவில் லஞ்ச பணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக அமலாக்க துறை சார்பில் லஞ்ச ஒழிப்பு போலீசில் ஏற்கனவே அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர்.

இதன்படி கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்ட நிலையில் இரண்டாவது முறையாக நேற்று சோதனை நடைபெற்றது,

இந்த சோதனையில் வழக்கு விசாரணைக்கு தேவையான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹவாலா பண பரிமாற்றம்

அமலாக்க துறையினர் அளித்திருந்த புகாரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பல்வேறு துறைகளுக்கு 2538 ஊழியர்களை நியமிப்பதில் ஊழலும் முறைகேடுகளும் நடைபெற்றுள்ளதாகவும், தகுதியற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து பெருமளவில் பணம் வசூலிக்கப்பட்டு அவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும் உதவி பொறியாளர் இளநிலைப் பொறியாளர், சுகாதார ஆய்வாளர், வரைவாளர் போன்ற பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி அது தொடர்பான ஆவணங்களை முழுமையாக கைப்பற்றி உள்ளனர்.

இதற்காக வசூலிக்கப்பட்ட லஞ்ச பணம் 2024 - 2025 -ம் ஆண்டில் ஹவாலா மூலமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு இருப்பதையும் அமலாக்க துறையினர் ஏற்கனவே கண்டுபிடித்து இருந்தனர்.

இதன் அடிப்படையிலேயே பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்களது விசாரணையை வேகப்படுத்தி இருக்கிறார்கள்

இதன் அடிப்படையிலேயே சென்னை, திருச்சி, கோவை நாமக்கல், நெல்லை உள்ளிட்ட 25 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

ஆவணங்கள்

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது

வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய குற்றங்களை நிரூபிக்கக் கூடிய வகையிலான 170 ஆவணங்களும், 13 மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் ஹவாலா பணி மாற்றம் தொடர்பான ஆவணங்களும் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இது கே.என். நேரு மீதான லஞ்ச ஒழிப்பு வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்ட நடவடிக்கை

கடந்த திமுக அதிமுக ஆகிய இரண்டு ஆட்சி காலங்களிலும் போடப்பட்ட லஞ்ச ஒழிப்பு வழக்குகளை பொருத்தவரையில் அது நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்துள்ளன.

ஆனால் அதுபோன்று இல்லாமல் லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார் இதன்படி

கே.என். நேரு மீதான வழக்கு விசாரணையை விரைவாக முடித்துதண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால் லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்களுக்கு கிடைத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

இதற்கு முன்பு திராவிட கட்சிகளின் ஆட்சியின் போது போடப்பட்டுள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகள் பல ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திசை மாறி சென்றுள்ளன.

லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆட்சி மாறியதும் வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நிகழ்வுகளும் அரங்கேறி இருக்கின்றன. இதனை கோர்ட்டும் கண்டித்து உள்ளது.

அதுபோன்று இல்லாமல் கடந்த திமுக ஆட்சியில் லஞ்சம் வாங்கிய அனைத்து அமைச்சர்கள் மீதும் பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் கே.என். நேரு மீதான வழக்கு விசாரணையில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, எவ்வளவு சீக்கிரம் வழக்கு விசாரணையை முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்து சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உரிய தண்டனையை வாங்கிக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

X