

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கிய புகாரில் மேலும் 157 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகலுக்கு மேல் இரவு வரை பாட்டிலுக்கு ரூ.10 வாங்கிய புகாரில் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கூடுதலாக பணம் வாங்கிய 67 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 48 டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன.
இந்தக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையைவிட, பாட்டிலுக்கு ரூ.10 மற்றும் அதற்கு மேலும் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக நீண்டகாலமாக புகார்கள் இருந்து வருகின்றன.
இந்தக் கூடுதல் வசூல் முறைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று த.வெ.க. அரசு அறிவித்தது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
செயலி மூலம் முன்பதிவு செய்துவிட்டு, கடைகளில் நேரடியாக மதுபானங்களை வாங்கும் நடைமுறையும் கொண்டு வரப்பட்டது. அதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
இதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதில் பெரும்பாலானவை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதன்படி, கடந்த 1-ந்தேதி முதல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேற்பார்வையாளர்களுக்கு ரூ.22 ஆயிரத்து 313-ல் இருந்து ரூ.33 ஆயிரத்து 23 ஆகவும், விற்பனையாளர்களுக்கு ரூ.19 ஆயிரத்து 413-ல் இருந்து ரூ.30 ஆயிரத்து 284 ஆகவும், உதவி விற்பனையாளர் களுக்கு ரூ.17 ஆயிரத்து 925-ல் இருந்து ரூ.28 ஆயிரத்து 680 ஆகவும் மாத ஊதியம்உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.486.90 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
மேலும், ஊழியர்களுக்கு ரூ.20 ஆயிரம் பண்டிகை போனஸ் வழங்கப்படும். ஆண்டு தோறும் 3 சீருடைகளுக்கான துணி மற்றும் தையல் செலவுக்காக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.
கடைகளுக்கு பராமரிப்புத் தொகை, 8 மணி நேர சுழற்சி முறையில் பணி, வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை, மாதத்திற்கு 2 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடு முறை உள்ளிட்ட சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர தகுதியுள்ள 250 டாஸ்மாக் பணியாளர்கள் சிறப்புத் தேர்வு மூலம் இளநிலை உதவியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இ.எஸ்.ஐ. சலுகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் முதல் ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இனிமேல் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதை அரசு எந்த வகையிலும் அனுமதிக்காது என்று அமைச்சர் விக்னேஷ் கடுமையாக எச்சரித்தார்.
அரசு நிர்ணயித்த விலையைவிட ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தால்கூட முதல் முறையில் 3 மாதங்கள் பணியிடைநீக்கம் செய்யப்படுவார்கள்.
அதே தவறை மீண்பரவைடும் செய்தால் நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று சட்டசபையிலும் அமைச்சர் அறிவித்தார்.
இந்தநிலையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தும், அமைச்சரின் எச்சரிக்கையையும் மீறி பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவது தொடர்வதாக மதுப்பிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுதொடர்பான செய்தி நேற்றைய தினத்தந்தியில் பிரசுரிக்கப்பட்டது. இது அரசின் கவனத்துக்குச் சென்றது.
மேலும், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வசூலிப்பது உள்ளிட்ட புகார்களை மதுபிரியர்கள் எளிதாகத் தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு புதிய புகார் சேவை மையத்தை தொடங்கியது.
இந்த மையத்திற்கு வந்த புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், 67 டாஸ்மாக் ஊழியர்கள் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்ததாக 67 டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கிய புகாரில் மேலும் 157 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், கடந்த 2 நாட்களில் மட்டும் மொத்தம் 224 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 3 மாதங்கள் பணி வழங்கப்படாது.
அரசின் நடவடிக்கை டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.