தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை சவுந்தரராஜன்

அன்று சிதம்பர ரகசியம்... இன்று ரகசியமாக சிதம்பரம் - தமிழிசை கிண்டல்

சிதம்பர ரகசியம் என்பது முதுமொழி என்றும் ரகசியமாக சிதம்பரம் இருக்கிறார் என்பது இன்றைய நிலை என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கிண்டலாக கூறி உள்ளார்.
Published on

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை ப.சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

சிதம்பர ரகசியம் என்பது முதுமொழி. ரகசியமாக சிதம்பரம் இருக்கிறார் என்பது இன்றைய நிலை. சிதம்பரம் இன்று தேடப்படுகிறார். எதற்காக தேடப்படுகிறார் என்றால் அவர் செய்த ஊழல் குற்றச்சாட்டிற்கு, செய்த தவறுக்காக தேடப்படுகிறார்.

பொது வாழ்க்கையில் தூய்மை இல்லை என்றால் தலைமுறைக்கே தலைவராக இருந்தாலும்... தலைமறைவு வாழ்கை வாழ வேண்டியிருக்கும் என்பதை உலகுக்கு உணர்த்தி இருக்கிறது சிதம்பரத்தின் ஊழல் போக்கு.

சிதம்பரம் இரண்டு வகையில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார். ஒன்று பொது வாழ்க்கையில் தூய்மை இல்லை என்றால் இப்படிப்பட்ட வழக்குகளை சந்திக்க நேரிடும்.

இரண்டாவது சட்டம் தன் கடமையைச் செய்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். தனக்கு ஒரு சம்மன் வந்து இருக்கிறது என்றால் அதை ஏற்று விசாரணைக்கு தன்னை உட்படுத்திக் கொள்வது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்.

பிரபலமானவர்கள் சாமானியர்கள் இரண்டு பேருக்கும் சட்டம் சமம்தான். ஒரு முன்னாள் நிதியமைச்சர், சட்டம் பயின்றவர், உச்சநீதிமன்றத்தின் பிரபலமான வழக்கறிஞர். ஆனால் சி.பி.ஐ. சம்மன் அனுப்பியும் நியாயமான முறையில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அவர் ஒத்துழைக்க மறுப்பது ஏன்?

மடியில் கனமில்லை என்றால் விசாரணையை எதிர்கொள்ள வேண்டியது தானே.

தன்னுடைய சட்ட அறிவை, தான் செய்த தவறுகளில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள பயன்படுத்தி பல முறை வாய்தா வாங்கி கைதில் இருந்து தப்பித்து இருக்கிறார்.
சிதம்பரத்தை கைது செய்ய வேண்டும் என்றால் அங்கேயே வந்து கைது செய்து இருக்கலாம். சட்டரீதியாக ஒரு வீட்டில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

சி.பி.ஐ. அதிகாரிகள் வீட்டிற்கு சென்றது சரியா என்று கேள்வி கேட்கும் எதிர்க்கட்சியினர் டெல்லியில் இருந்து வீட்டிற்கு வராமல் இருப்பது சரியா என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதி ரமணா அவரது ஜாமீன் மனுவை மறுத்திருக்கிறார்.

ஆக தவறு செய்தவர்கள் விசாரணையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com