

சென்னை:
விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவர் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக 'வெள்ளையனே வெளியேறு' என்று முதல் விடுதலை குரல் எழுப்பிய மாவீரன் பூலித்தேவர் பிறந்தநாளான இன்று அவரது வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்வதில் பெருமிதம் அடைகிறேன்.
விடுதலைக்கான வேட்கை தமிழ்நாட்டிலிருந்துதான் முதலில் கிளம்பிற்று என்பதற்கு பூலித்தேவரின் விடுதலை போராட்டமே ஆதாரமாக விளங்குகிறது.
இன்றைக்கு நாட்டிற்கு எத்தகையை இடையூறுகள் எந்த திசையில் இருந்து வந்தாலும், நாம் நாட்டின் பக்கம் உறுதியுடன் நின்று, தேசப்பற்றை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்றால் மாவீரர் பூலித்தேவர் போன்ற சுதந்திரப்போராட்ட வீரர்கள் காட்டிய வழிதான்!
விடுதலை வீரர் பூலித்தேவரால் நெற்கட்டும் செவல் தமிழ்நாடு மட்டுமல்ல இந்த நாடே பெருமை அடைகிறது.
பூலித்தேவரின் தேசப்பற்றை நமது நெஞ்சில் ஏந்தி, இந்த நாட்டு ஒற்றுமைக்கும், மேன்மைக்கும் தொடர்ந்து பணியாற்றுவோம்!
மாவீரர் பூலித்தேவரின் விடுதலை உணர்வையும் துணிவையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றிடுவோம்! தமிழ்நாட்டின் தன்மானச் சுடரொளியை என்றென்றும் உயர்த்திப் பிடித்திடுவோம்!
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.