7.5 சதவீத இடஒதுக்கீடு கேட்டு புதுச்சேரி அரசு பள்ளியில் படித்த மாணவன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

மருத்துவ படிப்பில் தமிழக அரசு வழங்கும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டு பலனை கேட்டு புதுச்சேரி மாநில அரசு பள்ளியில் படித்த மாணவன் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை ஐகோர்ட்
சென்னை ஐகோர்ட்
Published on

சென்னை:

விழுப்புரம் மாவட்டம், குமுளம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், “எங்கள் கிராமம், புதுச்சேரி மாநிலத்துக்கு மிக அருகில் உள்ளது. இதனால், புதுச்சேரி மாநிலம், ஆர்.எஸ்.பாளையத்தில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் அரசு பள்ளியில் படித்தேன். மருத்துவ படிப்புகான ‘நீட்’ தேர்வில் 500 மதிப்பெண் எடுத்துள்ளேன். புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான், அம்மாநில அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேரமுடியும். நான் தமிழகத்தை சேர்ந்தவன் என்பதால், தமிழக அரசு தற்போது அறிவித்து அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் செய்தேன். ஆனால், கவுன்சிலிங்கின் போது, என்னுடைய பெயர் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பட்டியலில் இடம் பெறவில்லை. எனவே, 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் எனக்கு மருத்துவ படிப்பில் இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும்” என்று தமிழக அரசு கூறியது. இதையடுத்து நீதிபதி எம்.துரைசாமி, “தமிழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத இடஒதுக்கீட்டு பலனை, புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நீட்டித்து வழங்க இந்த ஐகோர்ட்டு உத்தரவிட முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறேன்” என்று உத்தரவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com