பீகாரில் 7வது முறையாக முதல் மந்திரியாக பொறுப்பேற்கிறார் நிதிஷ் குமார்

பீகாரில் 7-வது முறையாக முதல் மந்திரியாகும் நிதிஷ் குமார் இன்று மதியம் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்
Published on

பாட்னா:

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது.

அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. 74 தொகுதிகளைக் கைப்பற்றி ஆளும் கூட்டணியில் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த கூட்டணி ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது.

இதையடுத்து அடுத்து ஆட்சி அமைப்பது பற்றி முடிவெடுப்பதற்காக நிதிஷ் குமார் தலைமையில் கடந்த 13-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் இதுவரை ஒத்துழைப்பு அளித்த அமைச்சரவையின் அனைத்து சகாக்களுக்கும் முதல் மந்திரி நிதிஷ் குமார் நன்றி தெரிவித்தார்.

நவம்பர் 29-ம் தேதியுடன் முடிவடைய உள்ள சட்டசபை கடந்த 13-ம் தேதி கலைக்கப்பட்டது. இந்த நடைமுறைகள் முடிந்த பின் பீகாரில் புதிய அரசு அமைவதற்காக நிதிஷ் குமார் முதல் மந்திரி பதவியில் இருந்து விலகினார்.  இதனை கவர்னர் பகு சவுகான் ஏற்று கொண்டார். ஆனாலும், புதிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் வரை முதல் மந்திரியாக நீடிக்கும்படி அவரிடம் கவர்னர் கேட்டு கொண்டார்.

இதற்கிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நேற்று மதியம் நடைபெற்றது.  இதில் அடுத்த முதல் மந்திரியாக நிதிஷ் குமார் தொடர்வது என ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக, நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முடிவு கவர்னரிடம் தெரிவிக்கப்பட்டு விட்டது. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதமும் வழங்கப்பட்டு விட்டது. திங்கட்கிழமை மதியம் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும். இதுபற்றி நாங்கள் பேசி, யாரெல்லாம் பதவி பிரமாணம் எடுக்க வேண்டும் என முடிவு செய்வோம். சட்டசபை கூடவேண்டிய நாள் பற்றி அமைச்சரவை முடிவு செய்யும் என தெரிவித்தார். 

இந்நிலையில், பீகார் மாநிலத்தின் முதல் மந்திரியாக 7-வது முறையாக நிதிஷ் குமார் இன்று மதியம் பொறுப்பேற்க உள்ளார். நிதிஷ் குமார் தொடர்ந்து 4-வது முறையாக பீகார் முதல் மந்திரியாக பதவியேற்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com