போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கனிமொழி ஆர்ப்பாட்டம்

தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் இன்று மாலை 3 மணிஅளவில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
கனிமொழி
கனிமொழி
Published on

சென்னை:

கடந்த 21-ந்தேதி திருச்சி டெல்டா மாவட்டத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது முதல்வரின் பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்த சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ், பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக வந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜேஷ் தாஸ் மீது புகார் கொடுத்த அந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரி சென்னை நோக்கி காரில் வந்தபோது செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணன் அதிரடிப்படையுடன் சென்று பரனூர் அருகே அவரது காரை வழிமறித்து புகார் கொடுக்கக்கூடாது என்று மிரட்டியதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியானது.

இந்த மிரட்டல்களை மீறி பெண் ஐ.பி.எஸ். அதிகாரி சென்னை வந்து டி.ஜி.பி.யை சந்தித்து புகார் கொடுத்ததை தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று மாலை 3 மணிஅளவில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை கிழக்கு- வடக்கு மாவட்ட மகளிர் தொண்டர் அணியினர் திரளாக கலந்துகொள்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com