ரஷிய தடுப்பூசி மருந்து இந்த மாதம் வருகிறது

கொரோனா 2-வது அலை பரவல் அதிகமாக இருப்பதால் தடுப்பூசி திட்டத்தை இன்னும் வேகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது நாடு முழுவதும் 12 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஆனால் கொரோனா 2-வது அலை பரவல் அதிகமாக இருப்பதால் தடுப்பூசி திட்டத்தை இன்னும் வேகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் 2 நிறுவனங்களும் தடுப்பூசி உற்பத்தி செய்து கொடுப்பது குறைவாக இருக்கிறது.

எனவே போதுமான தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் உருவாகி உள்ளது. இதை தடுப்பதற்கு மேலும் சில தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி 3-வதாக ரஷியா தயாரிக்கும் ஸ்புட்னிக்-வி மருந்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய மருந்து கட்டுப்பாட்டுக் கழகம் இந்த அனுமதியை வழங்கியது.

இந்தியாவில் ரெட்டிலேபரட்டரி மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்த மருந்தை இறக்குமதி செய்து சப்ளை செய்கிறது. மேலும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யவும் திட்டமிட்டு இருக்கிறது.

இதேபோல இந்தியாவில் உற்பத்தி செய்ய மேலும் சில நிறுவனங்களும் ஸ்புட்னிக் தயாரிப்பு நிறுவனத்திடம் தொடர்பு கொண்டுள்ளன. முதலாவதாக இந்த மருந்து இந்த மாதமே ரஷியாவில் இருந்து இந்தியாவுக்கு வருகிறது.

இது சம்பந்தமாக ரஷியாவுக்கான இந்திய தூதர் பால வெங்கடேஷ்வர்மா கூறியதாவது:-

ரஷிய மருந்தை இந்தியாவுக்கு அனுப்புவதற்கு அந்த நிறுவனம் உடனடியாக முன் வந்து இருக்கிறது. எனவே இந்த மாதம் இறுதியிலேயே ஸ்புட்னிக்-வி மருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுவிடும்.

இந்தியாவில் இந்த மருந்தை மே மாதவாக்கில் தயாரிக்க உள்ளனர். மாதம் 5 கோடி டோஸ் மருந்து தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்புட்னிக்-வி மருந்தை அவசர தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதித்துள்ளது. எனவே கோவிஷீல்டு, கோவேக்சின் மருந்துகளுடன் ஸ்புட்னிக்-வி மருந்தும் தடுப்பூசியாக போடப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com