ஆண்டிப்பட்டியில் அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் தீ விபத்து

ஆண்டிப்பட்டியில் உள்ள அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் லட்சக்கணக்கான மதிப்பில் பொருட்கள் சேதமானது.
தீ விபத்து
தீ விபத்து
Published on

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள க.விலக்கு பகுதியில் அண்ணா கூட்டுறவு நூற்பாலை செயல்பட்டு வருகிறது. கடந்த 1984-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் இலங்கை அகதிகளுக்காக இந்த மில் தொடங்கப்பட்டது.

அப்போது 250 அகதிகளும், 250 உள்ளூர் கிராம மக்களும் இதில் வேலை பார்த்து வந்தனர். தற்போது இந்த மில்லில் 90 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 180 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 3 ஷிப்ட்களாக பணி நடந்து வருகிறது. இன்று அதிகாலை 6.35 மணியளவில் பஞ்சு குடோன் பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது.

சிறிதுநேரத்தில் மளமளவென தீப்பிடித்து அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறியது. இதனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

மேலாளர்கள் சுப்பையா, பாலகிருஷ்ணன் ஆகியோர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆண்டிப்பட்டி மற்றும் தேனி பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்தபோதும் குடோனில் இருந்த பஞ்சு மற்றும் பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து ஊழியர்கள் தெரிவிக்கையில், குடோனில் இருக்கும் பஞ்சுகழிவுகள் வாரத்திற்கு ஒருமுறை அகற்றப்படவேண்டும்.

ஆனால் கடந்த ஒரு மாதமாக பஞ்சு கழிவுகள் அகற்றப்படாமல் அதிகளவில் குவித்து வைக்கப்பட்டிருந்ததே தீ விபத்துக்கான காரணம் என தெரிவித்தனர்.

இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த உடன் ஊழியர்கள் வெளியே ஓடிவந்ததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com