அண்ணாமலை ‘சைக்கிளா?’ பாபா ‘முத்திரையா?’ ரஜினி கட்சி சின்னம் பற்றி ஆலோசனை

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் (ஜனவரி) அரசியல் கட்சி தொடங்கப் போகிறார். கட்சி சின்னமாக அண்ணாமலை ‘சைக்கிளா?’ பாபா ‘முத்திரையா?’ எதை தேர்வு செய்யலாம் என்று ஆலோசனை நடத்தி உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த்.
Published on

சென்னை:

ரஜினி அடுத்த மாதம் (ஜனவரி) அரசியல் கட்சி தொடங்கப் போகிறார். கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி ஆகியோரை நியமித்துள்ளார்.

கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் தொடங்கி நடந்து வருகின்றன. தொடக்க விழா நடத்துவதற்குள் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கியது.

இதற்காக கட்சியின் கொள்கை, நிர்வாக அமைப்பு உள்ளிட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

கட்சி சின்னமாக எதை தேர்வு செய்யலாம் என்று ரஜினி ஆலோசனை நடத்தி உள்ளார்.

ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது அரசியல் பிரவேசம் பற்றி அறிவித்தபோது மன்ற கொடியையும் அதன் சின்னமாக பாபா படத்தில் பிரபலமடைந்த பாபா முத்திரையையும் அறிமுகப்படுத்தினார். ரசிகர்கள் மத்தியில் பாபா முத்திரை பிரபலமானது.

எனவே கட்சிக்கும் பாபா முத்திரையை சின்னமாக வைக்க ரஜினி விரும்பி உள்ளார். இதையடுத்து தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள சின்னங்கள் பட்டியலை ஆய்வு செய்துள்ளனர்.

ஆனால் அதில் பாபா முத்திரை எதுவும் இல்லை. அந்த முத்திரை போல் முத்திரை சின்னம் ஒதுக்க முடியுமா? என்று தேர்தல் ஆணையத்தை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்கள்.

அந்த சின்னம் இல்லையென்றால் சைக்கிள் சின்னம் கேட்கலாம் என்றும் யோசித்து வருகிறாராம். அண்ணாமலை படத்தில் பால்காரர் பாத்திரத்தில் சைக்கிளில் வலம் வருவார் ரஜினி. அதுவும் மக்களிடம் பிரபலமானதுதான்.

ஏற்கனவே சைக்கிள் சின்னம் த.மா.கா.விடம் இருந்தது. பின்னர் அந்த சின்னம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த இரு சின்னங்களில் ஒன்றை தேர்வு செய்வது பற்றி ரஜினி ஆலோசித்து வருகிறாராம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com