கோவையில் பரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்ட திமுக நிர்வாகி அடித்துக் கொலை

கோவையில் பரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்ட திமுக நிர்வாகி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை
கொலை
Published on

சூலூர்:

கோவை சூலூர் அருகே உள்ளது முத்துக்கவுண்டன் புதூர். இங்குள்ள பட்டத்தரசியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 37). பெயிண்டர்.

இந்த பகுதியின் தி.மு.க. கிளைத்தலைவராகவும் இருந்தார். இவருக்கு மனைவி 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று வேலை முடிந்து வந்த ஆரோக்கியராஜ் குடும்பத்துடன் சிறிது நேரம் பேசி மகிழ்ந்தார்.

நேரமாகிவிட்டதால் இன்று இரவு ஓட்டலில் பரோட்டா வாங்கி சாப்பிடலாம் என்று மனைவி மற்றும் குழந்தைகள் கேட்டனர். இதற்கு சம்மதம் தெரிவித்த ஆரோக்கியராஜ் அருகில் உள்ள கரிகாலன் என்பவரது ஓட்டலுக்கு சென்றார்.

அங்கு தேவையான பரோட்டா கேட்டார். கடைக்காரர் பரோட்டக்களை கட்டிக்கொடுத்தார். அப்போது குருமா குறைந்த அளவே உள்ளது. சாப்பிடுவதற்கு இது போதாது. இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று ஆரோக்கியராஜ் கேட்டார். நீங்கள் கொடுத்த பணத்துக்கு தகுந்தவாறு குருமா கொடுத்துள்ளேன். இதற்கு மேல் கொடுக்க முடியாது என்று கடை உரிமையாளர் கூறினார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அப்போது அங்கிருந்த பரோட்டா மாஸ்டர் கருப்பசாமி, ஓட்டல் உரிமையாளரின் நண்பர் முத்து ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆரோக்கியராஜை அடித்து உதைத்தனர். இதில் ஆரோக்கியராஜ் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் ஆரோக்கியராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சூலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க.வினர் நள்ளிரவு அங்கு திரண்டு கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இது குறித்து சூலூர் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டின் வழக்குப் பதிவு செய்து சம்பவம் நடந்த ஓட்டலுக்கு வந்தார்.

அங்கிருந்த ஓட்டல் உரிமையாளர் கரிகாலன் மற்றும் மாஸ்டர் கருப்புசாமி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். கொலையில் தொடர்புடைய கரிகாலனின் நண்பர் முத்து என்பவரை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com