

புதுடெல்லியில் நடைபெற்ற 25-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டத்தில் தமிழக மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டமானது 1.7.2017 முதல் அமல்படுத்தப்பட்ட பின் நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் (ஜிஎஸ்டி) வரி மன்ற கூட்டங்களில் வணிக பிரதிநிதிகள், வணிக கூட்டமைப்பு மற்றும் வணிகர்களிடமிருந்து பெறப்பட்ட 84 கோரிக்கைகள் மன்றத்தின் பரிசீலனைக்கு வைக்கப்பட்டன. இதில் தமிழ்நாடு தொடர்பான 42 கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்பட்டு வரி விலக்கு மற்றும் வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளன.
இவை தவிர தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்து இதுவரை 315 சரக்குகளுக்கும் மற்றும் 56 சேவைகளுக்கும் வரி குறைப்பு மற்றும் வரி விலக்கு அளிக்க ஜி.எஸ்.டி, மன்றம் பரிந்துரைத்ததின் அடிப்படையில் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
25-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டத்தில் 30 சரக்குகள் மற்றும் 47 சேவைகள் மீது வரிக் குறைப்பு மற்றும் வரி விலக்கு மற்றும் தெளிவுரை வழங்குவதற்கு பரிந்துரைகள் செய்திருந்தது. இந்த பரிந்துரைகளில், பாஸ் போரிக் அமிலம், விபூதி, எண்ணெய் எடுக்கப்பட்ட அரிசி தவிடு, சொட்டு நீர் பாசன கருவிகள், 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன்களில் அடைக்கப்பட்ட தண்ணீர், சர்க்கரை மிட்டாய், நுண் ஊட்டச்சத்துக்கள், கேளிக்கை பூங்காக்கள், தண்ணீர் பூங்காக்கள், இராட்டினம், கோ-கார்டிங் மீதான நுழைவு வரி, டூர் ஆப்ரேட்டர் சேவைகள் தொடர்பான உள்ளிட்டு வரி வரவு அனுமதித்தல் தோல் பொருட்கள் மற்றும் காலணிகள் தொடர்பான சில்லறை வேலை, கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் தேர்வு மற்றும் நுழைவு தேர்வு தொடர்பான சேவைகள், பொது கழிவு சுத்திகரிப்பு நிலையம் தொடர்பான சேவைகள் போன்ற தமிழ்நாடு முன் வைத்த கோரிக்கைகளும் உள்ளடங்கும்.
25-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின்படி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்ட பொருட்கள் விவரம்:-
பழைய மற்றும் பயன் படுத்தப்பட்ட மோட்டார் வாகனங்களின் (நடுத்தர மற்றும் பெரிய கார்கள் மற்றும் எஸ்.யூ.வி.எஸ்.) வழங்குநர்களின் ஆதாயத் தொகையின் மீதான வரி, அத்தகைய வாகனங்களின் மீது செலுத்தப்பட்ட மத்திய கலால் தீர்வை, மதிப்புக் கூட்டு வரி அல்லது ஜி.எஸ்.டி. வரியின் மீதான உள்ளீட்டு வரிவரவு துய்க்கப்படாத நிலையில் இருத்தல் வேண்டும்.
முற்றிலும் பயோ-டீசல் கொண்டு பொது போக்கு வரத்திற்காக இயக்கப்படும் பேருந்துகள்.
28 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்ட பொருட்கள் விவரம்:-
அனைத்து வகையான பழைய மற்றும் பயன் படுத்தப்பட்ட மோட்டார் வாகனங்களின் (நடுத்தர மற்றும் பெரிய கார்கள் மற்றும் எஸ்.யூ.வி. கார்கள் அல்லாத) வழங்குநர்களின் ஆதாயத் தொகையின் மீதான வரி, அத்தகைய வாக னங்களின் மீது செலுத்தப்பட்ட மத்திய கலால் தீர்வை, மதிப்க்கூட்டு வரி அல்லது ஜி.எஸ்.டி. வரியின் மீதான உள்ளீட்டு வரிவரவு துய்க்கப்படாத நிலையில் இருத்தல் வேண்டும்.
18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்ட பொருட்களின் விபரம்:-
சர்க்கரை மிட்டாய்கள், 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன்களில் அடைக்கப்பட்ட தண்ணீர், உரத்தரம் கொண்ட பாஸ் போரிக் அமிலம், பயோ டீசல், பயோ-பூச்சிக் கொல்லிகள், மூங்கில் சட்டங்கள், லேட்ரல், ஸ்பிரிங்கலர் உள்ளடக்கிய சொட்டு நீர் பாசன முறை இயந்திர தெளிப்பான்,
18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்ட பொருட்களின் விவரம்:-
புளியங்கொட்டை பொடி, கூம்புகளில் அடைக்கப்பட்ட மருதாணி, பசை தனியார் எல்.பி.ஜி. வினியோகஸ்தர்களால் வீட்டு பயன் பாட்டிற்காக விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு செயற்கைகோள் மற்றும் அதனைச் செலுத்துவதற்கான வாகனங்கள் தொடர்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கருவிகள், ஆய்வுகருவிகள், சாதனங்கள், துணை பாகங்கள், பாகங்கள், அங்கங்கள், உதிரிகள், தளவாடங்கள், மாதிரிகள் மற்றும் கூடகங்கள், மூல பொருட்கள் மற்றும் பயன்பாட்டு பொருட்கள். வைக்கோல், புல் அல்லது பிற பின்னல் பொருட்கள் கொண்டு செய்யப்பட்ட தயாரிப்புகள், கூடை மற்றும் பிரம்பு-கூடை வகைகள் 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன.
வெல்வெட் துணிகளுக்கான வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வைரம் மற்றும் விலைஉயர்ந்த கற்கள் மீதான வரி 3 சதவீதத்தில் இருந்து 0.25 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கேட்கும் கருவிகள் தயாரிப்பதற்கான பாகங்கள் மற்றும் துணை பாகங்கள், எண்ணெய் நீக்கப்பட்ட அரிசி தவிடு ஆகியவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. #tamilnews