சுரேஷ்பிரபு ராஜினாமா முடிவு: மத்திய மந்திரிசபையில் அதிமுகவுக்கு இடம் அளிக்க மோடி ஆலோசனை

ரெயில் மந்திரி சுரேஷ் பிரபு ராஜினாமா செய்ய முன்வந்ததால் மந்திரி சபையை மாற்றி அமைக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
சுரேஷ்பிரபு ராஜினாமா முடிவு: மத்திய மந்திரிசபையில் அதிமுகவுக்கு இடம் அளிக்க மோடி ஆலோசனை
Published on

புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலத்தில் 4 நாட்களில் அடுத்தடுத்து 2 ரெயில் விபத்துக்கள் நடந்தன. முதலில் நடந்த விபத்தில் 22 பயணிகள் உயிரிழந்தனர். அடுத்த விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதனால் மனவேதனை அடைந்த ரெயில் மந்திரி சுரேஷ் பிரபு ராஜினாமா செய்ய முன்வந்தார். இதையடுத்து அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு சுரேஷ் பிரபு தனது டுவிட்டரில் விபத்துக்கு தார்மீக பொறுப் பேற்று பதவி விலகுவதாக பிரதமர் மோடியை சந்தித்து கூறினேன். அவர் பொறுத்திருக்குமாறு கூறினார் என்று குறிப்பிட்டுள்ளார்.

சுரேஷ்பிரபு கோரிக் கையைத் தொடர்ந்து பிரதமர் மோடி மத்திய மந்திரிசபையை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளார். அப்போது சுரேஷ் பிரபு ராஜினாமாவை ஏற்று அவருக்கு வேறு இலாகா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

மந்திரி சபை மாற்றத்தின் போது அ.தி.மு.க.வுக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2019-ல் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தென் இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் எம்.பி.க்களை பெற வேண்டும் என்று பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

இதற்காக பா.ஜனதா தனது கூட்டணியை பலப்படுத்த முடிவு செய்துள்ளது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் பங்கெடுத்து இருப்பது போல் தமிழகத்தில் அ.தி.மு. க.வுக்கும் மத்திய மந்திரி பதவி கொடுத்து கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது.

எனவேதான் தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு இணக்கமான வகையில் நடந்து வருகிறது. அ.தி.மு.க. இணைப்பு முயற்சியிலும் பா.ஜனதாவுக்கு பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது அ.தி.மு.க.வை மத்திய மந்திரி சபையில் சேர்க்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அ.தி.மு.க.வில் யாருக்கு மத்திய மந்திரி பதவி வழங்கலாம் என்பதை அந்த கட்சி முடிவு செய்து பிரதமருக்கு தெரிவிக்க வேண்டும்.

இது தொடர்பாக அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் கூட்டம் கூடி யாரை மத்திய மந்திரி சபையில் சேர்க்க சிபாரிசு செய்யலாம் என்று ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கிறது.

பாராளுமன்றத்தில் தற்போது 3-வது பெரிய கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. வுக்கு துணை சபாநாயகர் பதவி மட்டும் வழங்கப்பட்டுள்ளது. தம்பிதுரை துணை சபாநாயகராக இருக்கிறார்.

மந்திரி சபை மாற்றி அமைக்கப்படும் போது அவர் மத்திய மந்திரி ஆவாரா? அல்லது மைத்ரேயன், வைத்திலிங்கம் ஆகியோரில் ஒருவர் மத்திய மந்திரி ஆவாரா? என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com