

பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், பாராளுமன்ற முன்னாள் சபாநாயகருமான சுமித்ரா மகாஜன் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
76 வயதாகி விட்டதால் அவரை தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்குமாறு மோடியும், அமித்ஷாவும் கேட்டுக்கொண்டனர்.
சுமித்ரா மகாஜன் போல பல்வேறு மாநிலங்களில் பல பாரதிய ஜனதா மூத்த தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அந்த மூத்த தலைவர்களுக்கு கட்சி உயர்மட்ட அமைப்புகளிலும் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படவில்லை.
எனவே பாரதிய ஜனதா மூத்த தலைவர்களுக்கு என்ன பதவிகளை வழங்கலாம் என்று சமீபத்தில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது பல்வேறு மாநிலங்களில் தற்போது இருக்கும் கவர்னர்களை மாற்றி விட்டு, புதிய கவர்னர்களாக பா.ஜனதா மூத்த தலைவர்களை நியமனம் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கவர்னர் பதவி பெற உள்ளார். அவருக்கு மராட்டிய மாநில கவர்னர் பதவி வழங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
சுமித்ரா மகாஜனுக்கு பூர்வீக மாநிலம் மராட்டியமாகும். அந்த மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தில்தான் அவர் பிறந்தார்.
ஆனால் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஜெயந்த் மகாஜனை திருமணம் செய்த பிறகு இந்தூரில் குடியேறி விட்டார். எனவே அவரை மராட்டிய கவர்னர் ஆக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே பெரிய மாநிலங்களில் பா.ஜனதா மூத்த தலைவர்களையே கவர்னர்களாக கொண்டு வர நினைக்கிறார்கள். அதற்கு வசதியாக சில மாநில கவர்னர்களை மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.