

பிரதமர் நரேந்திர மோடி எடுத்த ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகள் உரிய பலனை தரவில்லை. அதற்கு பதிலாக பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி பற்றிய ஆய்வு அறிக்கையில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக சரிந்துள்ளது.
இந்த நிலையில் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான யஷ்வந்த் சின்கா பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார். இதனால் வளர்ச்சி கீழ்நோக்கி சென்று விட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதே போல் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் பொருளாதார நடவடிக்கைகளை விமர்சித்தார். 500, 1000 ரூபாய் நோட்டு மதிப்பிழப்பால் பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் குறைந்துள்ளது.
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் உள்ள குறைபாடுகளாலும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. அதை சரி செய்ய வேண்டும். நாட்டின் பொருளாதார நிலை கீழ்நிலை வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. எனவே, எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியை நோக்கி செல்வது குறித்து கடந்த மே மாதமே பிரதமரை எச்சரித்தது இப்போது தெரிய வந்துள்ளது.
சுப்பிரமணியசாமி கடந்த மே மாதம் 9-ந் தேதி பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதாவது பொருளாதார ஆய்வு அறிக்கை வருவதற்கு 2 மாதத்துக்கு முன்பே இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார்.
இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிவை நோக்கி செல்லும் நிலை உள்ளது. எனவே, அதை சரிக்கட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பிரதமர் அலுவலகத்தில் பிரச்சினைகள் மேலாண்மை குழு ஒன்றை அமைக்க வேண்டும். இதன் மூலம் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
2019-ல் பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் இதுபோன்ற சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது நல்லது. இல்லையென்றால் தேர்தலை பாதித்து விடும்.
இன்றைய பொருளாதார நிலை பல்வேறு தவறான அறிகுறிகளை காட்டும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. அதில் உடனடியாக கவனம் செலுத்துங்கள். பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக செல்வது பின்னர் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இழுத்து சென்று விடும். எனவே, இந்த விஷயத்தை சிறப்பாக கையாள உரிய நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்.
இவ்வாறு சுப்பிரமணியசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.