தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ்., எடப்பாடியுடன் மர்ம யுத்தம் நடத்துகிறார்: சுப.வீரபாண்டியன் தாக்கு

ஓ.பன்னீர் செல்வம் முன்பு தர்மயுத்தம் நடத்தினார். ஆனால், தற்போது எடப்பாடி பழனிசாமியுடன், அவர் மர்மயுத்தம் நடத்துகிறார் என்று சுப. வீரபாண்டியன் குற்றம் சாட்டினார்.
தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ்., எடப்பாடியுடன் மர்ம யுத்தம் நடத்துகிறார்: சுப.வீரபாண்டியன் தாக்கு
Published on

நாகர்கோவில்:

மத்திய மாநில அரசுகளின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து, நாகர்கோவில் நகர தி.மு.க.இளைஞரணி சார்பில் கோட்டார் நாராயண தெருவில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, நகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். நகரசெயலாளர் மகேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

அப்போது, சுப.வீரபாண்டியன் பேசியதாவது:- இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட அடுத்த நாளே, ஆர்.கே.நகரில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்நோக்கம் உள்ளது.

தமிழகத்தில், எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்து விட்டதாக கூறுகின்றனர். அணிகள் இணைப்புக்கு பின்னும் அவர்கள் அ.தி.மு.க. கட்சியினராக செயல்படவில்லை. இன்னமும் தனித்தனி அணியினராவே செயல்படுகின்றனர். முன்பு, ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். ஆனால், தற்போது எடப்பாடி பழனிசாமியுடன், அவர் மர்மயுத்தம் நடத்துகிறார். இந்த அரசை மத்திய பா.ஜனதா அரசு காப்பாற்றி வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் மக்கள்விரோத நடவடிக்கையால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். அதன் விளைவு, வருகிற ஆர்.கே.நகர் தேர்தலிலும், குஜராத் தேர்தலிலும் கட்டாயம் எதிரொலிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ.பெர்னார்டு, கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு அமைப்பாளர் தில்லைசெல்வம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com