பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி: இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 165/4 - போராடும் ஸ்மித்

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி: இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 165/4 - போராடும் ஸ்மித்
Published on

பிரிஸ்பேன்:

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலஸ்டயர் குக், மார்க் ஸ்டோன்மான் ஆகியோர் களமிறங்கினர்.

குக் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஜேம்ஸ் வின்சி, ஸ்டோன்மானுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அரைசதம் அடித்தனர். ஸ்டோன்மான் 53 ரன்களில் அவுட்டானார். வின்சி 83 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன்-அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரூட்டும் ரன்கள் எடுக்கவில்லை. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 80.3 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்திருந்தது. மலான் 28 ரன்களுடனும், மோயின் அலி 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. மலானும், மோயின் அலியும் 83 ரன்கள் ஜோடி சேர்த்த நிலையில் மலான் அவுட்டானார். அவரை தொடர்ந்து மோயின் அலியும் வெளியேறினார். அதன்பின் யாரும் நிலைத்து ஆடாததால் இங்கிலாந்து அணி 302 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், நாதன் லியான் 2 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சில் ஆஸ்திரேலியா அணி 76 ரன்கள எடுப்பதற்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தூணாக நின்றார். அவர் அரைசதம் அடித்து அசத்தினார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. ஷான் மார்ஷ் 44 ரன்களுடனும், கேப்டன் ஸ்மித் 64 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கின்றனர். 

இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், மோயின் அலி, ஜேக் பால் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com