

விருதுநகர்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
மேலும் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு இடங்களில் பஸ் மற்றும் ரெயில் மறியல் போராட்டமும் நடத்தி கட்சியினர் கைதானார்கள்.
விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு தலைமையில் காரியாபட்டி பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்றனர். அவர்கள் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு நகரச் செயலாளர் காதர் மொய் தீன், மாநிலக்குழு உறுப்பினர் சீனிவாசன் உள்பட 300 பேர் மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைதானார்கள்.
அருப்புக்கோட்டை எம்.எஸ். கார்னரில் தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.
இதில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்று கைதானார்கள்.
ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி அரசரடி பஸ் நிறுத்தம் பகுதியில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் ஸ்டேட் வங்கி முன்பு ராஜபாளையம் நகரச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டு கைதானார்கள்.
மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். #tamilnews