விருதுநகரில் இன்று மாலை தி.மு.க. முப்பெரும் விழா- மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு விருதுகள் வழங்குகிறார்

தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். முப்பெரும் விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் பேராசிரியர் விருதுகள் வழங்கப்படுகிறது.
விழா பந்தல் நுழைவு வாயில்
விழா பந்தல் நுழைவு வாயில்
Published on
<p>விழா அரங்கத்தின் முகப்பில் மாளிகை போன்றும், மலைமுகடு போன்றும் அமைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்</p>

விருதுநகர்:

தி.மு.க. முப்பெரும் விழா விருதுநகரில் இன்று மாலை நடக்கிறது. இந்த விழாவிற்காக விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் பட்டம்புதூர் அண்ணாநகரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கலைஞர் திடலில் மாலை 4 மணியளவில் தி.மு.க. முப்பெரும் விழா தொடங்குகிறது.

தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வரவேற்று பேசுகிறார். தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.

இந்த விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் பேராசிரியர் விருதுகள் வழங்கப்படுகிறது. பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதனுக்கும், அண்ணா விருது கோவை மோகனுக்கும், கலைஞர் விருது தி.மு.க.வின் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.க்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது புதுச்சேரி திருநாவுக்கரசுக்கும், பேராசிரியர் விருது குன்னூர் சீனிவாசனுக்கும் வழங்கப்படுகிறது.

அவர்களுக்கான விருது, பொற்கிழி மற்றும் பாராட்டு சான்றிதழை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழங்கி பேருரையாற்றுகிறார். மேலும் தி.மு.க.வின் அனைத்து நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பணமுடிப்பு மற்றும் சான்றிதழையும் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார்.

தி.மு.க. முப்பெரும் விழாவில் தொண்டர்கள் கலைஞர் எழுதிய 4,041 கடிதங்கள், 21 ஆயிரத்து 510 பக்கங்கள் கொண்ட 54 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பையும் முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

இந்த விழாவில் முதலமைச்சரின் எண்ணம் கொண்ட 148 பக்க திராவிட மாடல் புத்தகம் வெளியிடப்படுகிறது. இந்த புத்தகத்தை துரைமுருகன் வெளியிட, டி.ஆர்.பாலு பெற்றுக்கொள்கிறார். முப்பெரும் விழா முடிவில் விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு நன்றி கூறுகிறார்.

முப்பெரும் விழா நடக்கும் திடலில் நுழைவு பகுதியில் மலைமுகடு போன்று பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அதில் பெரியார், அண்ணா, கருணாநிதி உருவ படங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் பந்தலில் நுழைவு வாயில் மாளிகை போன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

விழா பந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் இரவை பகலாக்கும் வகையில் ஏராளமான மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விழா பந்தல் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விழாவை 1 லட்சம் பேர் பார்க்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி விழா பந்தலின் அருகில் 7 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் முப்பெரும் விழாவில் கலந்து கொள்ளும் கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் விழா நடக்கும் பகுதியில் செய்யப்பட்டுள்ளது.

முப்பெரும் விழாவில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருதுநகரில் திரண்டுள்ளனர். விழா ஏற்பாடுகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வருகையால் விருதுநகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com