கொரோனா பாதிப்பு - அ.தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் உடல்நலம் பற்றி கேட்டறிந்த முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் கொரேனா வைரஸ் தாக்கம் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் பலருக்கும் நோய் தொற்றி உள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 397 ஆக அதிகரித்தது. இதனை தடுக்கும் பணிகள், முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.
பழனி, சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலம் 156-வது வட்டத்துக்கு உட்பட்ட முகலிவாக்கம் மதனந்தபுரம் பகுதியில் வசித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுக்கு இவர் கடந்த சில தினங்களாக நிவாரண உதவிகளை வழங்கி வந்தார். கடைசியாக கடந்த 10ந்தேதி காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த செரப்பனஞ்சேரி பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கினார்.
எம்.எல்.ஏ. பழனிக்கு நேற்று முன்தினம் இரவு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை உடனடியாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் எம்.எல்.ஏ. பழனிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். எம்.எல்.ஏ. பழனியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு கொரோனா தொற்று ஆரம்ப நிலையில்தான் உள்ளது என்றும், விரைவில் அவர் குணம் அடைவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

