கொரோனா அதிகமாக பரவினால் சமாளிப்பது எப்படி? - மருத்துவ குழுவுடன் நாளை எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

கொரோனா அதிகமாக பரவினால் சமாளிப்பது எப்படி? என்பது பற்றி மருத்துவ குழுவுடன் நாளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி - கோப்புப்படம்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி - கோப்புப்படம்
Published on

சென்னை:

தமிழகத்தில் 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஏராளமான தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது. முக்கியமாக மாநிலத்திற்குள் பொது போக்குவரத்து மற்றும் ரெயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு உள்ளன.

இதுபோன்ற தளர்வினால் கொரோனா தொற்று அதிகம் பரவும் என்று கருதி, வழிகாட்டி விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் அவற்றை மீறுவதை குற்றம் என்று அறிவித்து அபராத தொகையையும் அதிகரித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர, வழிகாட்டி விதிமுறைகளை மக்கள் கடைபிடிக்காவிட்டால் அக்டோபர் மாதத்தில் தொற்று எண்ணிக்கை மிக அதிகமாக உயரும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கே.சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் மருத்துவ குழுவினருடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரிவான ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்கு நடத்தப்படுகிறது.

இந்த கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிரு‌‌ஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

தற்போது பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ள நிலையில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், தயார் நிலை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை எண்ணிக்கைகளை உயர்த்துவது, பரிசோதனைகளை அதிகரிப்பது, சிகிச்சை மையங்களை தயார்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com