பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: அத்வானி உள்ளிட்டோரின் மனுக்கள் தள்ளுபடி

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் இருந்து தங்களை விடுவிக்குமாறு அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 12 பேர் தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: அத்வானி உள்ளிட்டோரின் மனுக்கள் தள்ளுபடி
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் அமைந்திருந்த வரலாற்று சிறப்புவாய்ந்த பாபர் மசூதி, 1992–ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 6–ந்தேதி கரசேவை நடத்தி தகர்க்கப்பட்டது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

ஒரு வழக்கில் பாபர் மசூதியை இடித்த கரசேவகர்கள் மீதும், மற்றொரு வழக்கு பாபர் மசூதி இடிப்புக்கான குற்றச்சதியில் ஈடுபட்டதாக அத்வானி உள்ளிட்ட 21 தலைவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்டன. 

இதில் முதல் வழக்கில் விசாரணை லக்னோ தனிக்கோர்ட்டிலும், 2–வது வழக்கில் ரேபரேலி கோர்ட்டிலும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்றச்சதி வழக்கில் இருந்து பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 21 பேரை ரேபரேலி கோர்ட்டு 2001–ம் ஆண்டு விடுவித்தது.

இதை அலகாபாத் ஐகோர்ட்டு 2010–ம் ஆண்டு உறுதிசெய்தது. ஆனால் இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. லக்னோ, ரேபரேலி ஆகிய இரு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்று வந்த வழக்கை ஒரே 

நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. 

இதன்படி லக்னோ சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட தலைவர்கள் இன்று  நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதன்படி இன்று லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் ஆஜராகினர். 

பின்னர், அத்வானி உள்ளிட்டோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட லக்னோ சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், அத்வானி உள்ளிட்ட 12 பேருக்கும் சொந்த பிணைத்தொகையுடன் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 

பின்னர், குற்றம் சாட்டப்பட்ட 12 பேரும் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால், அவர்களது கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரம் இருப்பதால் மனுக்களை தள்ளுபடி செய்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com