பா.ஜ.க-வில் ஒரு நபர் ஆதிக்கம் நிறுத்தப்பட வேண்டும்: சத்ருகன் சின்கா எம்.பி.

பாரதிய ஜனதாவில் ஒரு நபர் ஆதிக்கம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அருண் ஷோரி போன்ற மூத்த தலைவர்களை ஓரங்கட்டியது ஏன் என்றும் சத்ருகன் சின்கா கேள்வியெழுப்பியுள்ளார்.
பா.ஜ.க-வில் ஒரு நபர் ஆதிக்கம் நிறுத்தப்பட வேண்டும்: சத்ருகன் சின்கா எம்.பி.
Published on

பீகார் மாநிலம் பாட்னா தொகுதி பா.ஜனதா எம்.பி.யும் நடிகருமான சத்ருகன் சின்கா கட்சியில் அதிருப்தியில் உள்ளார். அடிக்கடி கட்சித்தலைமைக்கும் பிரதமர் மோடிக்கும் எதிராக கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்.

பாட்னாவில் நேற்று அளித்த பேட்டியின் போது சத்ருகன்சின்கா தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறியதாவது:-

பா.ஜனதா தற்போது கடைப்பிடிக்கும் கொள்கைகள் மீது இளைஞர்களும், விவசாயிகளும், வணிகர்களும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் குஜராத், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு கடுமையான சவால் இருக்கும் என்பது எனது கருத்தாகும். இந்த உண்மை நிலவரத்தை நாம் கவனிக்க வேண்டும். அதே சமயம் எதிர்க்கட்சிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

பா.ஜனதாவில் இருக்கும் ஒரு நபரின் ஆதிக்கம், 2 பேரின் வழி நடத்துதல் ஆகியவை நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பா.ஜனதா ஒற்றுமையாக இருக்க முடியும்.

பா.ஜனதாவின் வளர்ச்சிக்கு மூத்த தலைவர்கள் மிகப்பெரிய பங்களிப்பு அளித்துள்ளனர். அவர்களின் ஆசீர்வாதத்துடன் துணிச்சலாக தேர்தலில் போட்டியிட வேண்டும்.


எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி போன்ற மூத்த தலைவர்கள் மீது என்ன தவறு உள்ளது என்பதை என்னால் இதுவரையில் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏன் அவர்கள் ஓரங்கட்டப்பட்டனர் அல்லது அன்னியப்படுத்தப்பட்டனர் என்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

நாம் அனைவரும் குடும்பம் போல் இருக்க வேண்டும். அவர்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதை சரி செய்வதற்கு ஏன் முயற்சி எடுக்கவில்லை.

கருப்பு பணத்துக்கு முடிவு கட்டுவதற்காக கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட உயர்மதிப்பு ரூபாய் நோட்கள் மதிப்பிழப்பு முடிவால் கருப்பு பணம் ஒழியவில்லை. மாறாக ஏராளமானோர் தங்களது வேலை வாய்ப்பை இழந்து விட்டனர். இதை பா.ஜனதா ஒப்புக்கொள்ள வேண்டும்.

குஜராத் படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீடு போராட்டம் தீவிரம் அடைந்து இருப்பதற்கு பா.ஜனதா தலைமையிடம் காணப்படும் ஆணவமும் ஒரு காரணம் ஆகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com