ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் ஆஜர்: நீதிமன்றம் மீது கடுமையான விமர்சனம்

பனாமா கேட் ஊழல் வழக்கில் பதவியை இழந்ததோடு விசாரணையை எதிர்கொண்டு வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப் கோர்ட்டில் இன்று ஆஜரானார்.
ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் ஆஜர்: நீதிமன்றம் மீது கடுமையான விமர்சனம்
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில், நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாக அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

மேலும், நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் முகமது சப்தார் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு கோர்ட்டான தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ஊழல் வழக்கு தாக்கல் செய்து, 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன்கள், மகள், மருமகன் மீது ஊழல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தனக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள 3 வழக்குகளையும் இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம், நவாஸ் ஷெரீப்பின் கோரிக்கையை நிராகரித்தது.

மேலும், இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வரும் தனது மனைவியை பார்க்க வேண்டியது இருப்பதால் விசாரணையில் இருந்து ஆஜராவதில் விலக்கு கோரியிருந்தார். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், இன்று தனது மகள் மரியம் நவாஸ் மற்றும் மருமகன் ஆகியோருடன் ஆஜரானார்.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பின்னர் வெளியே வந்த நவாஸ் ஷெரீப், நீதிமன்றத்தில் தனக்கு மட்டும் தீர்ப்பு சீக்கிரமாக கிடைத்து விடுவதாகவும், இரட்டை நிலைப்பாட்டுடன் நீதித்துறை செயல்படுவதாகவும் விமர்சித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com