சிறையில் இருந்து கொண்டே சசிகலாவும், தினகரனும் எடப்பாடி அரசை இயக்குகின்றனர்: மதுசூதனன் பேட்டி

ஜெயிலில் இருக்கும் சசிகலா, டி.டி.வி.தினகரனின் பின்னணியில் ஆட்சி செயல்படுவது தமிழக மக்களுக்கு நல்லதல்ல என்று மதுசூதனன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சிறையில் இருந்து கொண்டே சசிகலாவும், தினகரனும் எடப்பாடி அரசை இயக்குகின்றனர்: மதுசூதனன் பேட்டி
Published on

ராயபுரம்:

தண்டையார்பேட்டை இரட்டைகுழி தெரு, அப்பாசாமி தோட்டம் உள்பட 16 இடங்களில் ஓ.பன்னீர் செல்வம் நற்பணி மன்றத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி அவைத் தலைவர் மது சூதனன் நற்பணி மன்றத்தை திறந்து வைத்து பள்ளி குழந்தைகளுக்கு இலவச- நோட்டு புத்தகங்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் 256 நற்பணி மன்றங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக ஆர்.கே.நகர் தொகுதியில் திறந்து உள்ளோம்.

இதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். ஏழைகளின் குழந்தைகளுக்கு உதவிடும் வகையில் இரவு பாடசாலை மற்றும் எழை, எளிய, நடுத்தர மக்களுக்கு அரசு திட்டங்களை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜெயிலில் இருக்கும் சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் இந்த அரசை இயக்கி வருகின்றனர். 5 வருடம் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்ததை எப்படி ஏற்க முடியும்?

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை டி.டி.வி. தினகரன் கட்சியில் சேர்க்கப்படவில்லை. அவரை கட்சியில் சேர்த்து துணை பொதுச் செயலாளராக தேர்வு செய்ததை ஏற்க முடியாது.

ஜெயிலில் இருக்கும் சசிகலா, டி.டி.வி.தினகரனின் பின்னணியில் ஆட்சி செயல்படுவது தமிழக மக்களுக்கு நல்லதல்ல.

நிதி அமைச்சர் ஜெயக்குமார் விசுவாசம் இல்லாதவர். அவரது பேச்சுக்கு எல்லாம் கருத்து கூற வேண்டிய அவசியம் இல்லை.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரை தொண்டர்கள் மூலம் தேர்வு செய்ய தேர்தல் கமி‌ஷன் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

இவ்வாறு மதுசூதனன் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் விஜயகுமார் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com