கர்நாடக மந்திரி வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு - ரூ.7.5 கோடி சிக்கியது

டெல்லியில் வருமான வரித்துறையினர் இன்று நடத்திய அதிரடி சோதனையில் கர்நாடக மாநில எரிசக்தி துறை மந்திரி சிவகுமார் வீட்டில் இருந்து ஏழரை கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.
கர்நாடக மந்திரி வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு - ரூ.7.5 கோடி சிக்கியது
Published on

புதுடெல்லி:

குஜராத் மாநிலத்தில் ஆகஸ்டு 8ம் தேதி பாராளுமன்ற மாநிலங்களவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குஜராத் எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து பாராளுமன்ற மாநிலங்களவைக்கான புதிய உறுப்பினரை தேர்வு செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியின் சார்பில் அகமது பட்டேல் போட்டியிடுகிறார்.

இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்தனர். இதைதொடர்ந்து, மீதமுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தக்கவைக்கும் வகையில், அவர்களை பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலத்தில் எரிசக்தி துறை மந்திரியாக இருப்பவர் சிவகுமார். இவரது வீடு பெங்களுரில் அமைந்துள்ளது. இவருக்கு சொந்தமான ஈகிள்டன் கோல்ப் விடுதியில் தான் குஜராத் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் மந்திரி சிவகுமாருக்கு சொந்தமான கனகபுரா மற்றும் சதாசிவநகர் பகுதிகளில் உள்ள வீடுகள் உள்பட 39 இடங்களில் சோதனை நடத்தினர். ஏற்கனவே, வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கின் தொடர்ச்சியாக இந்த சோதனை நடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.

மேலும், குஜராத் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அவருக்கு சொந்தமான சொகுசு விடுதியிலும் திடீரென புகுந்து அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். இதனால் பெங்களூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல், டெல்லியில் உள்ள கர்நாடக மந்திரி சிவகுமாரின் வீட்டிலும்  வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் 5 கோடி ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு சோதனை நடைபெற்று வருகிறது.

பகல் 12 மணி நிலவரப்படி மந்திரி சிவகுமாருக்கு சொந்தமான இடங்களில் இருந்து மேலும் இரண்டரை கோடி ரூபாய் பிடிபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய சோதனையில் இதுவரை ஏழரை கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com