ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 15 லிமிட்டெட் எடிஷன் ஸ்டெல்த் பிளாக் கிளாசிக் 500 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்ய இருக்கிறது.
இந்தியாவில் ரூ.1.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 15 லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள்களும் கருப்பு பூனை படையை சேர்ந்த வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தியதாகும். செப்டம்பர் 2017-இல் நடைபெற்ற விழிப்புணர்வு பயணத்தின் அங்கமாக 15 வீரர்களும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 ஸ்டெல்த் பிளாக் நிற மாடலில் இந்தியா முழுக்க 8000 கிலோமீட்டர் பயணம் செய்தனர்.
தீவிரவாதத்திற்கு எதிராக போராடு (Fight Against Terror) என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த கருப்பு பூனை படையினர் இந்தியாவின் 13 மாநிலங்களை கடந்து 8000 கிலோமீட்டர் சாலை பயணம் மேற்கொண்டனர். புதிய லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள்கள் டிசம்பர் 13-ம் தேதி விற்பனை செய்யப்பட இருக்கிறது.
வாடிக்கையாளர்கள் -www.royalenfield.com/bravehearts வலைத்தள முகவரியில் புதிய லிமிட்டெட் எடிஷன் பைக் வாங்க பதிவு செய்து கொள்ளலாம். புதிய ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளில் என்.எஸ்.ஜி. சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும் என்றும் இந்த விற்பனையில் கிடைக்கும் லாப தொகை பெரர்னா எனும் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 15 மோட்டார்சைக்கிள்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பைக் வாங்க பதிவு செய்வோருக்கு பிரத்யேக குறியீடு வங்கப்படும், இதனை பயன்படுத்தி விற்பனையில் பங்கேற்க முடியும். விற்பனை தினத்தன்று வாடிக்கையாளர்கள் ரூ.15,000 செலுத்த வேண்டும்.