சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சிவப்பு - ஆரஞ்சு மண்டலம்
சிவப்பு - ஆரஞ்சு மண்டலம்
Published on

புதுடெல்லி:

ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் நாளை வரை நீடிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது மேலும் 2 வாரங்களுக்கு ஊடரங்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் நாடு முழுவதும் பாதிப்பின் அடிப்படையில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை அத்தியாவசியமற்ற பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

65 வயதுக்கும் மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்து மண்டலங்களில் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மக்களும் பொது இடத்தில் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கண்டிப்பாக ‘ஆரோக்கிய சேது ஆப்’பை பதிவிறக்கம் செய்து இருக்க வேண்டும்.

மது, குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யலாம். ஆனால், 6 அடி தூரத்துக்கு இடைவெளி விட்டு நின்று பொருட்கள் வாங்க வேண்டும். 5 நபர்களுக்கு மேல் கடைகளில் ஒரே நேரத்தில் கூடக்கூடாது.

விமான போக்குவரத்து, ரெயில், மெட்ரோ ரெயில், மாநில அளவிலான வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், கோச்சிங் சென்டர்கள் செயல்படக்கூடாது. ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள், மால், விளையாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.

மத வழிபாட்டுக்காக கூடுதல், சமூக, அரசியல், கலாச்சார நிகழ்ச்சிக்காக கூடுதலுக்கு அனுமதி இல்லை. அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாக பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த 14 நாட்களாக யாருக்கும் புதிதாக நோய் தாக்காத பகுதி ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 21 நாட்களாக புதிதாக யாருக்கும் நோய் இல்லாத பகுதி பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ள சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் வாரியாக தனித்தனியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மண்டலங்களுக்கும் உள்ள கட்டுப்பாடுகள் விவரம் வருமாறு:-

சிவப்பு மண்டல கட்டுப்பாடுகள் விவரம்:-

* வாடகை கார்கள் அனுமதி இல்லை. அதே நேரத்தில் தனியார் கார்களுக்கு அனுமதி உண்டு. 2 பயணிகள் மட்டுமே பயணம் செய்யலாம்.

மோட்டார் சைக்கிளுக்கு அனுமதி உண்டு. ஒருவர் மட்டும் பயணம் செய்யலாம். தனியார் அலுவலகங்களான கட்டுமான வடிவமைப்பு, வக்கீல்கள், ஐ.டி. நிறுவனங்கள் போன்றவை செயல்படலாம்.

ஆனால், 33 சதவீத பணியாளர்கள் மட்டுமே இருக்கலாம். மற்றவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். வீட்டு வேலைக்காரர்கள், உள்ளூர் பணியாளர்கள் போன்றவர்கள் பணி செய்ய அனுமதிக்கலாம்.

* மதுக்கடை, பான் மசாலா கடைகளை அனுமதிக்கலாம். சமூக இடைவெளியுடன் 5 வாடிக்கையாளர்கள் மட்டுமே நிற்க அனுமதி. மது பார்கள், ஓட்டல்கள் தொடர்ந்து மூடப்படும்.

* பத்திரிகை நிறுவனங்கள், டி.வி. நிறுவனங்கள் போன்ற ஊடகங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அது தொடர்பான சேவை நிறுவனங்கள், கால் சென்டர்கள், குடோன்கள், உணவு பதப்படுத்தும் தொழில்கள், தனியார் செக்யூரிட்டி, மேலாண்மை சேவை நிறுவனங்கள், சேவை மையங்கள் போன்றவை செயல்படலாம்.

சிறப்பு பொருளாதார மண்டலம், தொழில்பேட்டைகள், தொழில் டவுன் ஷிப்புகள் போன்றவற்றில் உள்ள தொழிற்சாலைகளை இயக்கலாம்.

* அத்தியாவசிய பொருள் தொழிற்சாலைகள், அதாவது மருந்து, மருத்துவ சாதன உற்பத்தி நிறுவனங்கள், மூலப்பொருள் நிறுவனங்கள் செயல்படலாம். தகவல் தொழில்நுட்ப ஹார்டுவேர் நிறுவனங்கள், சணல் உற்பத்தி ஆலைகள், பேக்கேஜ் பொருள் உற்பத்திகள் செயல்படலாம். அவை அனுமதிக்கப்பட்ட ஷிப்டு முறையை கடைப்பிடிக்க வேண்டும்.

* கட்டுமான தொழில்களை அந்த இடத்தில் கிடைக்கும் தொழிலாளர்களை கொண்டு செயல்படுத்தலாம். மரபுசாரா எரிசக்தி கட்டுமானங்கள் நடக்கலாம்.

* குடியிருப்பு பகுதியில் உள்ள கடைகள், அத்தியாவசிய பொருட்களின் கடைகள் செயல்படலாம். ஆன்லைன் வர்த்தகத்தில் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் சப்ளை செய்ய அனுமதி உண்டு.

* அரசு அலுவலங்களில் உயர் அதிகாரிகள் முழுமையாக பணிக்கு வரலாம். மற்றபடி 33 சதவீத ஊழியர்களை கொண்டு அலுவலகத்தை இயக்கலாம்.

* ராணுவம், போலீஸ், சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை போன்றவை தங்கள் பணிகளை செய்யலாம்.

* கிராம பகுதிகளில் மால்கள் தவிர, அனைத்து கடைகளும் செயல்படலாம்.

* கிராம பகுதிகளில் ஊரக வேலைவாய்ப்பு திட்டம், உணவு பதப்படுத்துதல், செங்கல் சூளைகள் செயல்படலாம்.

* விவசாய பணிகள், கால்நடை தொழில்களுக்கு அனுமதி.

* வங்கிகள், நிதி நிறுவனங்கள், இன்சூரன்சு, மூலதன தொழில்கள், கூட்டுறவு நிறுவனங்கள், காப்பகங்கள், அங்கன்வாடிகள் செயல்பட அனுமதி.

* குடிநீர், மின்சாரம், டெலிபோன், கூரியர் சர்வீஸ் போன்றவை செயல்பட அனுமதி.

* மே 17-ந்தேதி வரை விமானங்களுக்கு அனுமதி இல்லை.

* ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா, பஸ்கள், சலூன்கள், அழகு நிலையங்கள் போன்றவற்றுக்கு அனுமதி இல்லை.

ஆரஞ்சு மண்டல கட்டுப்பாடுகள் விவரம்:

* சிவப்பு மண்டலத்தில் உள்ள கட்டுப்பாடுகள் ஆரஞ்சு மண்டலத்துக்கு கிடையாது. வாடகை கார்கள், கேப் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. டிரைவர் தவிர 2 பயணிகள் மட்டும பயணம் செய்யலாம்.

* இந்த மண்டல மாவட்டத்துக்குள் தனி நபர்கள் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். வாகனங்களுக்கு அனுமதி உண்டு. விதிக்கப்பட்டுள்ள உரிய கட்டுப்பாடுகளுடன் அவை செயல்பட வேண்டும்.

* அனைத்து சரக்கு போக்குவரத்துக்கும் அனுமதிக்கப்படுகிறது. மாநில அரசுகள் மாநில எல்லையை தாண்டி வரும் அல்லது கடந்து செல்லும் சரக்கு வாகனங்களை தடுக்க கூடாது. முறைப்படி ஒப்பந்தம் செய்யப்பட்ட அண்டை நாடுகளின் சரக்கு வாகனங்களை தடுக்க கூடாது.

* அனைத்து 4 சக்கர வாகனங்களும் அனுமதிக்கப்படுகிறது. டிரைவருடன் 2 பயணிகள் மட்டுமே இருக்கலாம். 2 சக்கர வாகனங்கள் செயல்படலாம். ஒருவர் மட்டுமே அதில் பயணம் செய்ய வேண்டும்.

பச்சை மண்டலத்தில் உள்ள கட்டுப்பாடுகள் விவரம்:-

* அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், பொதுவான விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

* பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், மொத்த இருக்கையில் 50 சதவீத பயணிகள் மட்டுமே ஏற்ற வேண்டும். பஸ் டெப்போக்கள் மொத்தம் இருக்கும் பஸ்களில் 50 சதவீதத்தை மட்டுமே இயக்க வேண்டும்.

இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com