அரசியலுக்கு வந்துள்ள சினிமா நடிகர்களால் எந்த நன்மையும் இல்லை- ராமதாஸ்

தற்போது அரசியலுக்கு வந்துள்ள சினிமா நடிகர்களால் எந்த நன்மையும் இல்லை எனவும் மக்கள் அதை வரவேற்க மாட்டார்கள் என்றும் ராமதாஸ் கூறினார்.
அரசியலுக்கு வந்துள்ள சினிமா நடிகர்களால் எந்த நன்மையும் இல்லை- ராமதாஸ்
Published on

சேலத்தில் இன்று பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி பிரச்சனையில் பிப்ரவரி மாதம் 16-ந்தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கூறி உத்தரவிட்டது. அந்த கால அவகாசம் வருகிற 29-ந்தேதியுடன் முடிவடைகிறது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தயங்குவது ஏன்? அமைக்க வேண்டியது பிரதமரின் கடமை.

இது தொடர்பாக பிரதமரை சந்திக்க காத்திருக்கும் தமிழக குழுவை சந்திக்க மறுப்பது ஏன்? இன்று காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக 4 மாநில அதிகாரிகள் கூட்டம் நடக்கிறது. இது வெறும் கண்துடைப்பு. இந்த கூட்டத்தில் கர்நாடக மாநிலம் எதிர்ப்பு தெரிவிக்கும். தேதி குறிப்பிடாமல் இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்படும்.

கர்நாடகாவில் தேர்தல் வர உள்ள நிலையில் கர்நாடக மக்களுக்கு எதிரான முடிவை எடுக்க மத்திய அரசு தயங்கும். தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அதிரடி நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தி மேலவை உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும். அனைத்து கட்சியினரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் டெல்லி சென்று போராட்டம் நடத்த வேண்டும். மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும். இதை அரசு செய்யுமா? என்பது கேள்விகுறியாக உள்ளது.

காரணம் அளவுக்கு அதிகமாக ஊழல் செய்திருப்பதால் சோதனை நடத்தி மத்திய அரசு கைது செய்யும் என்ற அச்சம் உள்ளது. காவிரி பிரச்சனையில் ஜெயலலிதா பலமுறை உண்ணாவிரதம் இருந்துள்ளார். ஜெயலலிதா வழியில் நடக்கும் இந்த அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தொடர் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அமைக்கவில்லை என்றால் முதல்வர், அமைச்சர்கள் ராஜினாமா செய்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

காவரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மார்ச் மாதம் 30-ந்தேதி முதல் பா.ம.க.வினர் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். மாநில அரசு கலெக்டர்கள்-போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் அறிவித்துள்ளன. இதற்கு நிதி எங்கிருந்து வருகிறது என்ற அறிவிப்பு இல்லை.

மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் நாடு முழுவதும் 27 சதவீதம் இடம் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதை கண்டித்து சென்னையில் நாளை பா.ம.க. மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

பல்கலைக்கழகங்களில் பணிகளுக்கு இடஒதுக்கீட்டில் புதிய முறையால் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. பழைய முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

கோவையில் இருந்து பெங்களூரு- மங்களூருக்கு கெயில் குழாய் பதிக்கும் திட்டத்தால் 8 மாவட்டங்களில் 5 ஆயிரத்து 482 விவசாயிகளின் 1491 ஏக்கர் நிலம் கெயில் நிலம் கையப்படுத்தி இருக்கிறது. இந்த நிலத்தின் மதிப்பு ஒரு ஏக்கருக்கு ரூ.2கோடி முதல் ரூ.4 கோடி வரை இருக்கும். ஆனால் ஒரு ஏக்கருக்கு ரூ.3 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு இதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். இந்த எரிவாயு குழாய்களை சாலையோரமாக பதிக்க வேண்டும்.


எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு தயக்கம் ஏன்?, சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் முயற்சியை தடுக்க எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரும்பாலையை நவீனமயமாக்க வேண்டும். இந்த பிரச்சனையில் தமிழக அமைச்சர் குழு டெல்லி சென்று வற்புறுத்த வேண்டும்.

மேட்டூர் ரெயிலை தொடர்ந்து இயக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அரசியலுக்கு வந்துள்ள சினிமா நடிகர்களால் எந்த நன்மையும் இல்லை. மக்கள் அதை வரவேற்க மாட்டார்கள்.

எல்லா துறையிலும் ஊழல் அதிக அளவில் உள்ளது. அய்யாக்கண்ணு மீதான தாக்குதல் தமிழகத்தை தலை குனிய செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com