

தீ விபத்து காரணமாக அண்ணாசாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பாக காணப்பட்டது.
புதுச்சேரி அண்ணாசாலையில் தனியார் மதுபார் இயங்கி வருகிறது.
வழக்கம் போல் இன்று காலை 9 மணிக்கு பார் திறக்கப்பட்டது. மது குடிப்பவர்கள் உள்ளே குடித்துக் கொண்டிருந்தார்கள். திடீரென காலை 11 மணிக்கு ஏசியிலிருந்து மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது.
அது ரெஸ்டாரன்ட் மற்றும் தங்கும் அறைகளுக்கு பரவியது. தொடர்ந்து ஊழியர்கள் அங்கிருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இதனிடையே தீ பரவியதால் தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் தந்தனர்.
இதனையடுத்து 2 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ அணைக்கப்பட்டாலும் புகை காரணமாக உள்ளே யார் சிக்கினர் என தெரியவில்லை. இருப்பினும் குடித்து கொண்டிருந்த ஒரு சிலர் கையில் மது பாட்டிலுடன் வெளியே ஓடி வந்தனர்.
அந்த நேரத்தில் உள்ளே சிக்கிய மாஸ்டர் மற்றும் 2 ஊழியர்கள் மயக்க நிலையில் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று அவர்களை தூக்கி வந்தனர்.
மயக்கமாக இருந்த அவர்களுக்கு சி.பி.ஆர்.செய்து உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக அண்ணாசாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பாக காணப்பட்டது.