

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா என, புதுச்சேரி காவல்துறையிடம் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இன்று அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவருக்கு, காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் காவலர், தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண், இதுதொடர்பாக அந்த காவலர்மீது புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின்பேரில், விசாகா குழு அமைக்கப்பட்டது. ஆனால், மேல் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் காவலரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பெண் காவலரின் பாலியல் புகாரை விரைந்து விசாரித்து, 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது.
ஆனால், சம்பவம் தொடர்பாக விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை. இதையடுத்து, பெண் காவலரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், சம்பவம் தொடர்பான விசாகா குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில், புதுச்சேரி தலைமைச் செயலரை நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து நேற்று மீண்டும் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக, புதுச்சேரி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என மனுதாரர் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து நீதிபதி, பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், காவல் கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா? என அறிக்கை தாக்கல் செய்யக்கூறி, வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன்மீது காரைக்கால் மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.