

புதுச்சேரியில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா, என அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவருக்கு, போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் காவலர், தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
பின்னர், இச்சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் காவலர் போலீஸ் சூப்பிரண்டு மீது புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில், விசாகா குழு அமைக்கப்பட்டது. ஆனால், மேல் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் காவலரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பெண் காவலரின் பாலியல் புகாரை விரைந்து விசாரித்து, 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது.
ஆனால், சம்பவம் தொடர்பாக விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை. இதையடுத்து, பெண் காவலரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், சம்பவம் தொடர்பான விசாகா குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில், புதுச்சேரி தலைமைச் செயலரை நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்தநிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது, புதுச்சேரி அரசுத் தரப்பில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் சூப்பிரண்ட்டை பணியிடைநீக்கம் செய்திருப்பதாகவும், இதுகுறித்து விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், காவல் கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா? என கேள்வி எழுப்பினார். , இதுதொடர்பாக புதுச்சேரி டிஜிபி, காரைக்கால் மூத்த போலீஸ் சுப்பிண்டு ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 30-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.