புதுவை மக்களுக்கு ரங்கசாமி துரோகம் இழைத்துள்ளார்- நாராயணசாமி

ரங்கசாமி கட்சி தொடங்கியது முதல் மாநில அந்தஸ்து பெறுவோம் என கூறி வருகிறார். மத்தியில் உள்ள மோடி அரசு அவர் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
நாராயணசாமி
Published on

புதுவை முன்னாள் முதல்அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்-அமைச்சர்களும் பங்கேற்று, தங்கள் மாநிலத்துக்கு தேவையான திட்டங்கள், நிதி, வளர்ச்சி திட்டங்கள் குறித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

மிக முக்கியமான இந்த கூட்டத்தில் புதுவைக்கு தேவையான மாநில அந்தஸ்து, நிதி கமிஷனில் புதுவையை இணைப்பது, மத்திய அரசு கடன்களை தள்ளுபடி செய்வது, சிறப்பு நிதி வழங்குவது போன்ற கோரிக்கைகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. இதற்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம்.

என்ஆர்.காங்கிரஸ், பாஜகவுக்கு உள்ள விரிசலால் ரங்கசாமி டெல்லிக்கு செல்லவில்லையா? பிரதமர் கூட்டத்தை ரங்கசாமி புறக்கணிக்க முடிவு செய்துள்ளாரா? என தெரியவில்லை. ஆனால் மாநில வளர்ச்சிக்காக பேச வேண்டிய சிறந்த வாய்ப்பை ரங்கசாமி இழந்துவிட்டார். புதுவை மாநில வளர்ச்சிக்கு ரங்கசாமி மிகப்பெரும் துரோகம் இழைத்துள்ளார்.

ரங்கசாமி கட்சி தொடங்கியது முதல் மாநில அந்தஸ்து பெறுவோம் என கூறி வருகிறார். மத்தியில் உள்ள மோடி அரசு அவர் கோரிக்கையை நிராகரித்துள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் ரங்கசாமி, அழுத்தம் கொடுத்து புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற முயற்சி செய்திருக்கலாம். முதல்-அமைச்சர் இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசியிருந்தால் பிரதமர் பதில் கூறியிருப்பார். நல்ல வாய்ப்பை ரங்கசாமி தவறவிட்டுள்ளார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

பாஜகவை புறக்கணிக்க தனது எதிர்ப்பை கூட்டத்தை புறக்கணித்து ரங்கசாமி தெரிவித்துள்ளார். இந்த கூட்டம் எதிர்ப்பை பதிவு செய்யும் கூட்டம் அல்ல, மாநில பிரச்சனைகளை எழுப்ப வேண்டிய கூட்டம். புதுவை மக்கள் மத்தியில் இந்த கூட்டத்தில் பங்கேற்காததற்கு பகிரங்க மன்னிப்பை ரங்கசாமி கோர வேண்டும். ஒரு கூட்டத்துக்கும் ரங்கசாமி செல்வதில்லை.

புதுவை மாநில வளர்ச்சிக்கு ரங்கசாமி உறுதுணையாக இல்லை. புதுவை மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆட்சி ஆரம்பத்திலேயே மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. ரங்கசாமி நிதி அயோக் கூட்டத்தில் பங்கேற்காதது கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com