

புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் உயர் விருதான வண்ண கொடி விருது அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மார்ச் மாதம் இந்த விருது புதுச்சேரி காவல்துறைக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து அந்த விருதை கடந்த மாதம் புதுச்சேரி காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழங்குவதற்கான நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் அந்த விழா மீண்டும் இன்று நடைபெறுவதாக அறிவிக்கட்டது. இதைதொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக புதுச்சேரி வந்தார்.
டெல்லியில் இருந்து நேற்று மாலை சென்னை வந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை சென்றார். அங்கு அருணாசலேஸ்வரர் கோவில், ரமணா ஆசிரமத்திற்கு சென்று வழிபட்டார்.
அதைதொடர்ந்து இரவு திருவண்ணாமலையில் இருந்து சாலை மார்க்கமாக புதுச்சேரி வந்தார். இரவு 8.30 மணிக்கு புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு வந்தடைந்த அவரை கவர்னர் கைலாஷ் நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் அன்பழகன் மற்றும் அமைச்சர்கள், பா.ஜ.க மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் ஆகியோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷாக்கு கவர்னர் கைலாஷ்நாதன் இரவு விருந்து அளித்தார். பின்னர் மத்திய அமைச்சர் அமித்ஷா இரவு கவர்னர் மாளிகையிலேயே தங்கி ஓய்வு எடுத்தார்.
இன்று காலை 8.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து மத்திய அமைச்சர் அமித்ஷா காரில் புறப்பட்டு விழா நடைபெறும் கோரி மேடு போலீஸ் மைதானத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு புதுச்சேரி காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
புதுச்சேரி காவல்துறையின் பேண்ட்குழு அணிவகுப்பு இசை மற்றும் தேசிய கீதம் உள்ளிட்டவை இசைத்தனர். தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷா திறந்த ஜீப்பில் சென்று புதுச்சேரி காவல்துறையின் அணி வகுப்பை பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து புதுச்சேரி காவல் துறைக்கு ஜனாதிபதியின் வண்ண கொடி விருதை வழங்கினார். அதனை போலீஸ் டி.ஜி.பி. ஷாலினி சிங் பெற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷா விழாவில் பேசியதாவது:-
ஜனாதிபதியின் பெருமை மிக்க வண்ணக்கொடி விருது பெறும் புதுச்சேரி மக்களுக்கும், போலீஸ் துறையினருக்கும் வாழ்த்துகள். தமிழர்களின் உயிர்ப்புடைய கலாச்சாரம், பாரம்பரிய அடையாளமாக புதுச்சேரி விளங்குகிறது.
230 ஆண்டுக்கு மேலான பிரெஞ்சு ஆட்சியை தாண்டியும் புதுச்சேரி தனது சுயத்தை, தனித்தன்மையை இழந்து விடவில்லை, ஆன்மிக வேர்களை விட்டு விடவில்லை. 1963-ல் டி.ஐ.ஜி. பதவி அமைக்கப் பட்டது முதல், புதுச்சேரி போலீஸ் துறை உள்நாட்டு, எல்லை பாதுகாப்பில் புதுச்சேரி போலீஸ் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி, ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்த குற்றவியல் சட்டங்களை மாற்றி 3 புதிய குற்றவியல் சட்டங்களை அறிமுகப்படுத்தினார். இந்திய தண்டனை சட்டம், நீதி சட்டமாக மாற்றப்பட்டது. குறிப்பிட்ட காலத்தில் நியாயம் வழங்க வேண்டும் என அறி வுறுத்தப்பட்டது.
இந்த குற்றவியல் சட்டங்கள் தொழில்நுட்பம், குறித்த காலக்கெடு, நம்பிக்கை என்ற 3 தூண்களின் மேல் அமைக்கப்பட்டு உள்ளது.
யூனியன் பிரதேசங்களை பலப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் 12 ஆண்டு தொலைநோக்கு பார்வை. புதுச்சேரியை பொறுத்த வரை மோடியின் அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
ரூ.2 ஆயிரத்து 500 கோடியில் சாலை விரிவாக்க திட்டம், ரூ.2 ஆயிரத்து 200 கோடியில் காரைக்கால் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், புதுவை விமான நிலையம் 34 மீட்டர் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
1950 முதல் 2014 வரை புதுச்சேரிக்கு ரூ.35 ஆயிரம் கோடி மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2014 முதல் 2026 வரை பிரதமர் மோடி அரசு, ரூ.13 ஆயிரத்து 762 கோடி வழங்கியுள்ளது. 12 ஆண்டில் 4 மடங்கு நிதியை பிரதமர் மோடி அரசு புதுச்சேரிக்கு வழங்கியுள்ளது. கடந்த 9 ஆண்டில் ரூ.39 ஆயிரம் கோடிக்கு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் புதுச்சேரியில் 7.7 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். பிரதமர் மோடி அரசு உங்களின் தோளோடு தோள் நின்று புதுவை மாநில வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் உறுதுணையாக இருக்கும் என உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழா முடிந்ததும் மத்திய அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை அருகே உள்ள தனியார் ஒட்டலுக்கு சென்றார். அங்கு புதுச்சேரி பா.ஜ.க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அவர் தங்கியிருந்த ஓட்டல் எதிரே ராஜீவ்காந்தி சிலை சந்திப்பில் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி என்ற ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் 2500 வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.