

புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
2-ஜி அலைக்கற்றை வழக்கில் உச்சநீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டது.
அதனடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை நடந்தது. காங்கிரஸ், திமுக சார்பில் 2-ஜியில் எந்த ஊழலும் நடக்கவில்லை என தொடர்ந்து கூறி வந்தோம்.
ஆனால் முதன்மை தணிக்கை அதிகாரி ரூ.1.76 லட்சம் கோடி தோராயமாக அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறினார். சி.பி.ஐ. தரப்பில் ரூ.35 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. இதை பயன்படுத்தி பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் காங்கிரஸ் மீதும், தி.மு.க. மீதும் பல பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி வந்தனர். தமிழக சட்டமன்ற தேர்தலிலும், 2014 பாராளுமன்ற தேர்தலிலும் 2-ஜி வழக்கை சுட்டிக்காட்டி பிரசாரம் செய்தனர். இதன் மூலம் வெற்றியும் அடைந்தனர்.
ஆனால், தற்போது 2-ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ராஜா, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட 11 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. தர்மம் வென்றுள்ளது. காங்கிரஸ், திமுக மத்திய கூட்டணி ஆட்சியில் எந்த தவறும் நடைபெறவில்லை என்பது நிரூபணமாகி உள்ளது.
எங்கள் கூட்டணி அரசு எடுத்த முயற்சிகளால்தான் இன்று சாமானிய மக்களும் குறைந்தவிலையில் செல்போன் பயன்பாட்டை அனுபவிக்கின்றனர். 2ஜி வழக்கை அரசியல் காரணங்களுக்காக பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் பயன்படுத்தி கொண்டனர். இன்றைய தீர்ப்பின் மூலம் நாட்டு மக்களுக்கு காங்கிரஸ், தி.மு.க. மீது புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது. பா.ஜனதாவின் பொய்ப்பிரசாரம் அம்பலமாக தொடங்கி உள்ளது.
குஜராத் தேர்தலில் பிரதமர் நரேந்திரமோடி 36 முறை பிரசாரம் செய்தார். பா.ஜனதாவின் 35 மத்திய மந்திரிகள், 9 முதல்-அமைச்சர்கள், 170 எம்.பி.க்.கள் குஜராத்தில் முகாமிட்டு பிரசாரம் செய்தனர். இவர்களின் அனைத்து பிரசாரத்தையும் ராகுல்காந்தி தனி நபராக நின்று முறியடித்தார். குஜராத் தேர்தலில் காங்கிரசுக்கு 80 இடங்கள் கிடைத்துள்ளது.
16 இடங்களில் 300 வாக்குகளில் இருந்து 3 ஆயிரம் வாக்குகளில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. ராகுல்காந்தியின் பிரசாரத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. பா.ஜனதாவின் சூழ்ச்சிகளை முறியடித்து அதிகபட்ச இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. இது காங்கிரஸ் தொண்டர்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இனி வரும் சட்டமன்ற தேர்தல்களிலும் 2019 பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரசுக்கு வெற்றி கிடைக்கும் என்பது உறுதியாகி உள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில் நான் பிரசாரம் செய்யவில்லை. இருப்பினும் தி.மு.க. வேட்பாளருக்கு கூடுதல் செல்வாக்கு இருப்பதாக தெரிகிறது.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.