நியமன எம்.எல்.ஏ.க்களாக சாமிநாதன், சங்கர், செல்வகணபதி அதிகாரப்பூர்வ நியமனம்: புதுவை காங்கிரஸ் கடும் அதிர்ச்சி

புதுவையில் நியமன எம்.எல்.ஏ.க்களாக சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரை அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு நியமித்து இருப்பது காங்கிரசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நியமன எம்.எல்.ஏ.க்களாக சாமிநாதன், சங்கர், செல்வகணபதி அதிகாரப்பூர்வ நியமனம்: புதுவை காங்கிரஸ் கடும் அதிர்ச்சி
Published on

புதுவையில் சட்டசபையில் 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து கொள்ள அதிகாரம் உள்ளது. புதுவையில் காங்கிரஸ் ஆட்சி பதவியேற்று ஒராண்டு ஆன நிலையிலும் அவர்கள் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்கவில்லை.

இந்த நிலையில் மத்திய அரசே தன்னிச்சையாக 3 பேரை நியமிக்க முயற்சி எடுத்திருப்பதாக கூறப்பட்டது. இது சம்மந்தமான கோப்பு மத்திய அரசின் ஒப்புதலில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.

இதில் மாநில பாரதிய ஜனதா தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், தனியார் பள்ளி தாளாளர் செல்வகணபதி ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக தெரியவந்தது.

நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிப்பது என்றால் ஆளும் அரசு அவர்கள் பெயரை கவர்னருக்கு சிபாரிசு செய்யும். கவர்னர் அந்த பெயர்களை மத்திய அரசுக்கு சிபாரிசு செய்வார். இது தான் நடைமுறை வழக்கம் ஆகும்.

ஆனால் இப்போது புதுவை அரசுக்கே தெரியாமல் முயற்சிகள் நடப்பதாக கூறப்பட்டது. கவர்னர் கிரண்பேடி இந்த 3 பேர் பெயரையும் சிபாரிசு செய்திருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் கவர்னர் கிரண்பேடி தான் இவ்வாறு சிபாரிசு செய்யவில்லை என்பது போல மறைமுகமாக கூறினார். அதே நேரத்தில் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்று அவர் கூறினார்.

எனவே மத்திய அரசே தன்னிச்சையாக இதற்கான முயற்சியில் ஈடுபட்டது உறுதியானது. அப்படி நியமித்து விடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் சார்பில் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் நியமன எம்.எல்.ஏ.வுக்கு தடை விதிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

ஆனால் கோர்ட்டு தடைவிதிக்க மறுத்துவிட்டது. அடுத்த விசாரணை வரும் 5-ந்தேதி நடைபெறும் என்று வழக்கை ஒத்திவைத்தனர். கோர்ட்டு தடை விதிக்க மறுத்துவிட்டதால் நியமன எம்.எல்.ஏ.க்கள் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சாமிநாதன், சங்கர், செல்வ கணபதி ஆகிய 3 பேரையும் நியமன எம்.எல்.ஏ.வாக நியமித்து அதிகாரப்பூர்வமாக மத்திய அரசிடம் இருந்து புதுவை தலைமை செயலாளருக்கு கடிதம் வந்துள்ளது.

இதனால் 3 பேரும் நியமன எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளனர். பாரதிய ஜனதா நிர்வாகிகளை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து இருப்பது காங்கிரசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவர்கள் கவர்னரின் சிபாரிசில் நியமிக்கப்பட்டார்களா? அல்லது மத்திய அரசே தன்னிச்சையாக நியமித்ததா? என்பது இனிமேல்தான் தெரியவரும். ஆளும் கட்சி சிபாரிசு இல்லாமல் 3 பேர் நியமிக்கப்பட்டிருப்பது புதுவை வரலாற்றில் இதுதான் முதல் முறையாகும். எனவே புதுவை அரசியலில் இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com