தமிழகத்தில் அ.தி.மு.க. - பா.ஜனதா கட்சிகள் கைகோர்த்துள்ளன: பிரகாஷ்கரத்

தமிழகத்தில் அ.தி.மு.க. - பா.ஜனதா கட்சிகள் கைகோர்த்துள்ளன. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பா.ஜனதா அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டும் என்று நெய்வேலி கூட்டத்தில் பிரகாஷ்கரத் கூறினார்.
தமிழகத்தில் அ.தி.மு.க. - பா.ஜனதா கட்சிகள் கைகோர்த்துள்ளன: பிரகாஷ்கரத்
Published on

நெய்வேலி:

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் தனியார் மயத்தை தடுத்திடவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நெய்வேலியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க. - பா.ஜனதா கட்சிகள் கைகோர்த்துள்ளன. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு மத்திய பா.ஜனதா அரசிடம் மாநில அரசு எந்தவித உதவிகளையும், உரிமைகளையும் கேட்டு பெறவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பா.ஜனதா அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டும்.

இந்தியா 70-வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. தற்போது மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் சுதந்திர போராட்டத்தில் துளிஅளவுகூட பங்கு இல்லை. சுதந்திர இந்தியாவில் பொருளாதார கொள்கை உருவாக்கப்பட்ட போது அதில் பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

அப்படி உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றுதான் நெய்வேலி என்.எல்.சி. ஆகும். மத்திய ஆளும் பா.ஜனதா அரசு பொதுத்துறை நிறுவனங்களை ஒட்டுமொத்தமாக அழிக்கும் பணிகளை செய்து வருகிறது. நாடு முழுவதும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் ஒன்றுபட்டு வருகின்றனர். நாட்டில் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com