

சென்னை:
இந்திய தபால் துறை அரசினால் தடை விதிக்கப்பட்ட பொருட்கள் தவிர்த்து எஞ்சிய அனைத்து வகையான பொருட்களையும் பார்சல் சேவை மூலம் வீடு, நிறுவனங்களுக்கு வினியோகம் செய்து வருகிறது. அதே நேரத்தில், பெரும்பாலான வணிகம் சார்ந்த பொருட்கள் தனியார் பார்சல் சேவை அலுவலகங்கள், தனியார் கூரியர் சேவை நிறுவனங்கள் மூலமாகவும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. தபால் அலுவலகங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு 1 அல்லது 2 அலுவலகங்கள் தான் செயல்பட்டு வரும்.
அதே நேரத்தில், தனியார் பார்சல் சேவை அலுவலகங்களோ வணிக வளாகங்கள் நிறைந்த பகுதிகள், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் காணப்படும். இதனால், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் சார்ந்த பெரும்பாலான பொருட்கள் தனியார் பார்சல், கூரியர் சேவைகளிலேயே அனுப்பி வைக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், தனியார் பார்சல் சேவைகள் அனைத்தும் முடங்கின. ஆனால், அவசர தேவைக்கான சேவை என்பதால் தபால்துறை அலுவலகங்கள் மட்டும் மார்ச் 25-ந் தேதி முதல் தற்போது வரை தொடர்ந்து இயங்கி வருகிறது.இதனால், தனியார் பார்சல் சேவைகள் மூலம் அனுப்பப்பட்டு வந்த பல்வேறு பார்சல் சேவைகள் தற்போது தபால்துறை அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், ‘பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஹவுஷஷாதி பாரியோஜனா’ திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களான மருத்துவ உபகரண பொருட்களை அனுப்பி வைப்பதற்கான ஒப்பந்தங்கள் பல்வேறு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதன் மூலம் ஊரடங்கு உத்தரவு காலத்தில் தபால்துறை அலுவலகமானது சிறப்பாக செயல்பட்டு பார்சல் சேவையை தாங்கி பிடித்து உள்ளது என்று கூறினால் அது மிகை அல்ல.
அதாவது, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட மார்ச் 25-ந் தேதிக்கு முன்னர் சென்னை மண்டல தபால்துறை அலுவலகங்கள் (வேலூர், திருவண்ணாமலை, அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி) மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக 2 ஆயிரத்து 836 பார்சல்கள் புக்கிங் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், மார்ச் 25-ந் தேதி முதல் தற்போது வரை சராசரியாக ஒரு நாளைக்கு 3,570 பார்சல்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 734 பார்சல்கள் அதிகப்படியாக புக்கிங் செய்யப்பட்டுள்ளன.
மொத்தத்தில் ஊரடங்கு உத்தரவு காலத்தில் 45 ஆயிரத்து 954 பார்சல்கள் புக்கிங் செய்யப்பட்டு 32 ஆயிரத்து 739 பார்சல்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளது.
பஸ், ரெயில் போக்குவரத்து இல்லாத இந்த ஊரடங்கு உத்தரவு காலத்தில், அனைத்து பார்சல்களும் இந்திய தபால்துறை அலுவலக வாகனங்கள் மூலமே வினியோகிக்கப்பட்டன என்றும், தேவையான இடங்களில் தனியார் வாகனங்கள் மூலமும் தபால்துறை ஊழியர்கள் பார்சல்களை வினியோகம் செய்தனர் என்று தபால்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.