பாலியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு- ஐகோர்ட்டில் நீதிபதி தொடங்கி வைத்தார்

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில், அமர்வு நீதிமன்ற கட்டிடத்தில் சிறுவர்-சிறுமிகள் பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் (கோப்புப்படம்)
நீதிமன்றம் (கோப்புப்படம்)
Published on: 

சிறுவர்-சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்களை கடுமையாக தண்டிப்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டம் நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறுவர்-சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வது தொடர்பாக போடப்பட்ட வழக்குகள் 100 வரையில் இருந்தால் அந்த மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் சிறுவர்-சிறுமியர் பாலியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படுகின்றன.

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில், அமர்வு நீதிமன்ற கட்டிடத்தில் சிறுவர்-சிறுமிகள் பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த வளாகத்தில் இயங்கி வந்த மகளிர் கோர்ட்டு எழும்பூருக்கு மாற்றப்பட்டதால், அந்த கோர்ட்டு அறையில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு தொடங்கப்பட்டுள்ளது. இனி சிறுவர்-சிறுமிகள் தொடர்பான வழக்குகள் விரைந்து முடிக்கப்படும்.

சென்னையில் நிலுவையில் உள்ள 200-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகளை, கால வரம்பை நிர்ணயித்து, அந்த வழக்குகளை எல்லாம் விரைவாக விசாரித்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும். வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வர இருதரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

இவ்வாறு நீதிபதி வினீத் கோத்தாரி பேசினார்.

நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதி எம்.கோவிந்தராஜ், மாவட்ட நீதிபதிகள், வக்கீல்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சிறுவர்-சிறுமிகளை பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாப்பது தொடர்பாகவே இந்த போக்சோ (புரொடக்‌ஷன் ஆப் சில்ரன் ப்ரம் செக்சுவல் அபென்ஸ்) சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் தண்டனை வழங்கப்படும். போக்சோ சட்டத்தில் அதிக பட்சமாக ஆயுள் தண்டனை அளிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.

சட்டப்பிரிவில் 1 மற்றும் 3-ன்படி குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தினால் குறைந்த பட்சம் 7 ஆண்டு ஜெயில், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

சட்டப்பிரிவு 5 மற்றும் 6-ன்படி குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்கள் பெற்றோர், பாதுகாவலர், ஆசிரியர், காவல்துறை அதிகாரிகள் ஆகியோராக இருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரையிலும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அதே போல 7, 8 பிரிவின் படி குழந்தைகளை தொடுவது, சீண்டலில் ஈடுபடுவது போன்ற குற்றங்களுக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும்.

குழந்தைகளிடம் ஆபாசமாக செல்போனில் பேசுவது, பாலியல் ரீதியாக செய்கைகள் செய்வது, மின் அஞ்சல் அனுப்புவது, பாலியலுக்கு அழைப்பது போன்றவையும் இந்த சட்டத்தின்படி கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் குழந்தைகளை ஆபாச படங்கள் எடுப்பது, அதனை மற்றவர்களுக்கு அனுப்புவது போன்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுகள் வரையிலும் அல்லது ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும்.

குழந்தைகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட முயல் பவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் கிடைக்கும்.

சென்னையில் அமைக்கப்பட்டது போல தமிழகம் முழுவதும் 16 போக்சோ சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம் தமிழகத்தில் சிறுவர்-சிறுமிகள் மீதான பாலியல் வழக்குகளின் விசாரணை விரைவாக நடத்தி முடிக்கப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com