

திருவாரூர்:
தமிழர்கள் கொண்டாடும் பண்டிகையில் பொங்கல் பண்டிகை மிகவும் சிறப்புமிக்கது. பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. எவ்வளவு விலை விற்றாலும் அதனை யாரும் வங்காமல் செல்வதில்லை. திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி பகுதியில் கரும்பு அதிகமாக பயிரிடப்படுகிறது. தற்போது கரும்பு அறுவடைகள் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கரும்புகள் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அதன்படி திருவாரூர் கடைவீதிக்கு கரும்பு விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு கட்டு கரும்பு ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் பொங்கல் பரிசு வழங்குவதற்காக அதிகமாக கரும்புகளை அரசே கொள்முதல் செய்கிறது. இதனால் கரும்பு விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
அரசே பொங்கல் பண்டிகைக்கு வழங்கிட கரும்பினை கொள்முதல் செய்வதால், உற்பத்திக்கு ஏற்ப உரிய விலை கிடைக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர். இந்த ஆண்டு கொரோனா தாக்கம் என பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டு மக்கள் அவதியடைந்த நிலையில் ஒரு சில நாட்களில் பிறக்கும் புதிய ஆண்டு தீங்குகள் கழிந்து நல்லது நடக்கும் என நம்பிக்கையில் மகிழ்ச்சியுடன் வரவேற்று தமிழர் திருநாளாம் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாட அனைவரும் தயாராகி வருகின்றனர்.