

சென்னை:
மதுரையை சேர்ந்த ஸ்வப்னா என்ற திருநங்கை, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வை எழுதினேன்.
இந்த தேர்வில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, முதன்மை தேர்வையும் கடந்த ஆண்டு எழுதினேன். இதில் நான் தேர்ச்சிப் பெறவில்லை என்று டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் அறிவித்தது.
இந்த நிலையில், குரூப் 1 தேர்வில் பங்கேற்றவர்களின் உண்மையான விடைத் தாளை தனியார் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ளது. இதனால், குரூப் 1 தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சியின் வசம் உள்ள உண்மையான விடைத்தாளை கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் தொலைக்காட்சி நிர்வாகம், தன் வசம் உள்ள உண்மையான விடைத் தாளை தாக்கல் செய்தது.
இதையடுத்து, குரூப் 1 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக மனுதாரர் கூறுவது தீவிரமான குற்றச்சாட்டு ஆகும். எனவே, இந்த முறைகேடு குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் விசாரணை நடத்தவேண்டும். அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தி, முறைகேடு நடந்துள்ளதா? என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் 11-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்‘ என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.