எம்.எல்.ஏ. சம்பள உயர்வை வாங்க மாட்டேன்: சபாநாயகருக்கு தினகரன் கடிதம்

தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள கூடுதல் சம்பளத்தை தனக்கு வேண்டாம் என்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார். #dinakaran #mlasalary
எம்.எல்.ஏ. சம்பள உயர்வை வாங்க மாட்டேன்: சபாநாயகருக்கு தினகரன் கடிதம்
Published on: 

சென்னை:

தமிழக எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் உயர்த்தப்பட்டு சட்ட மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.வான தினகரன் தனது புதிய சம்பளம் வேண்டாம். பழைய சம்பளம் போதுமானது என்று சபாநாயகர் தனபாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தினகரன் கூறி இருப்பதாவது:-

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சம்பளம் மற்றும் படி ஆகியவை சேர்த்து மாதந்தோறும் ரூ.55 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 12-ந்தேதியன்று இந்தத் தொகையை ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை அறிமுக நிலையிலேயே பேரவையில் எதிர்த்தேன்.

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவும் பல திட்டங்களை செயல்படுத்த முடியாத அளவுக்கு நிதி பற்றாக்குறை இருப்பதாலும் அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனாலும் பேரவை உறுப்பினர்களுக்கு சம்பளத்தை உயர்த்தும் அந்த சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.

எனவே உயர்த்தப்பட்ட சம்பள உயர்வை நான் விட்டுக் கொடுக்கிறேன். சட்ட மசோதா நிறைவேறுவதற்கு முன்பு இருந்த சம்பளத்தையே எனக்கு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews #dinakaran #mlasalary

X

Maalai Malar
www.maalaimalar.com